செல்வ களஞ்சியமே – 77
ரஞ்சனி நாராயணன்

மூன்று வயது, 6 வயது குழந்தைகள் பள்ளியில் வன்முறைக்கு ஆளாகின்றார்கள் என்று கேள்விப்படும் போது பெற்றோர்களின் மனக்கவலைக்கு அளவேது? வீட்டிற்கு அடுத்தபடியாக பாதுகாப்பான இடம் என்றால் பள்ளிக்கூடம் தான் என்றிருந்த நிலை இன்று மாறி, அங்கும் வன்முறையாளர்கள் பரவி இருக்கும் நிலையில் நம் குழந்தைகளுக்கு குழந்தைப்பருவம் என்னும் பரிசினைக் கொடுக்க முடியமா?
இந்த உலகத்தை திருத்துவது என்பது நம்மால் இயலாத காரியம். நம்மால் செய்ய முடிந்ததை, நம் எல்லைக்குள் இருப்பதை செய்யலாமே. குழந்தை வளர்ந்து பெரியவளாகி தனது குழந்தைப் பருவத்தை நினைக்கும்போது இனிய நினைவுகள் அவளது மனதில் நிறைந்திருக்கும்படி செய்யலாமே. அளவில்லாத அன்பு, ஆரோக்கியமான உறவுகள், பாதுகாப்பான சூழ்நிலை, எண்ணற்ற கனவுகள் ஆசைகள் என்று இருந்த காலங்கள் அவளது நினைவில் நிலைத்திருக்கும் வண்ணம் செய்யலாம். நிச்சயம் இது நம்மால் முடிந்த ஒன்றுதான்.
சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் நமது அலட்சியத்தால் – இது என்ன பெரிய விஷயமா என்ற அலட்சியத்தால் – குழந்தையின் எதிர்காலத்திற்கு ஊறுவிளைவிக்கும். நமக்குத் தெரிந்த விஷயங்கள் தான் இவை. அவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
நம் குழந்தைகளுக்கு நான் கொடுக்கக்கூடிய அரிய பரிசு எதுவென்றால் நிபந்தனையற்ற அன்பு பாசம். இந்த அன்பும் பாசமும் குடும்பத்திலிருக்கும் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். அம்மாவிற்கு குழந்தை மேல் பாசம். அப்பாவிற்குக் குழந்தை மேல் பாசம். ஆனால் அம்மா அப்பாவிற்கு இடையில் இடைவிடாத சண்டை. அம்மாவிற்குப் பாட்டியைக் கண்டால் பிடிக்காது. பாட்டி அம்மாவைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். இந்த மாதிரியான உறவுகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.
நம்மூரில் நாலுபேர் எதிரில் மனைவி கணவனின் கையைப் பிடித்தக் கொண்டு நடந்தால் முகத்தை சுளிப்பார்கள். கணவன் மனைவியை ஆசையுடன் கன்னத்தில் தட்டினால் மனைவி சொல்லுவார்: ‘ஐயோ! குழந்தைங்க பார்க்கறாங்க!’ ஆனால் வீதியில் நடக்கும்போது, வீட்டில் பெரியவர்கள் எதிரில் சண்டை போடலாம். அது அவமானமில்லை. அதாவது குழந்தைகள் எதிரில் அன்பு பரிமாற்றங்கள் கூடாது. சுடுசொற்கள் பரிமாறிக்கொள்ளலாம்! இது என்ன லாஜிக்?
பெற்றோர்களின் சண்டை குழந்தைகளை மிகவும் பாதிக்கும். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் ஓ-ஜோன் (O-ZONE) என்ற பெயரில் வலைப்பதிவு எழுதும் திருமதி வினிதா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் தனது வலைப்பதிவில். ஒருமுறை இவரும் இவரது கணவரும் ஏதோ வாக்குவாதத்தில் மும்முரமாக இருந்தபோது திடீரென அழுகை சத்தம் கேட்டதாம். திரும்பிப்பார்த்ததில் இவரது பெரிய குழந்தை திரைக்குப் பின்னால் நின்றபடி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தானாம். அம்மா பார்ப்பதை கண்டவுடன் தனது தம்பியைக் கூப்பிட்டு ‘பாரு! இருவரும் சண்டை போட்டுக்கொள்ளுகிறார்கள்’, என்று புகார் சொன்னானாம். அவர் சொல்லுகிறார்: ‘அழும் குழந்தைகளை எங்களால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. இத்தனைக்கும் அன்று நாங்கள் அதிகமாகக் குரல் உயர்த்திப் பேசவில்லை. பெரியவன் என்னைப்பார்த்து, ‘எனக்கு முதலில் சொல்லு. எல்லாம் சரியாயிடுமா? இரண்டுபேரும் சீக்கிரமாக நார்மல் ஆகிவிடுவீர்களா?’ என்று திருப்பித் திருப்பிக் கேட்டான். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நிச்சயம் எல்லாம் சரியாகிவிடும் என்று திரும்பத்திரும்ப சொன்னோம். சிறிது நேரம் ஆனபிறகு குழந்தைகளிடம் சொன்னோம்: ‘நீங்கள் இருவரும் எப்படி சண்டை போட்டுக்கொள்ளுகிறீர்களோ, அதேபோலத்தான் நாங்களும். சில விஷயங்களை அவ்வப்போது பேசி முடிவு செய்துவிட வேண்டும். அப்போது ஒருவரின் குரல் சற்று ஓங்கி ஒலிக்கும். ஆனால் ஒருவரையொருவர் அடிப்பது, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது இதெல்லாம் தப்பு. ஆரோக்கியமான உறவில் சின்னசின்ன சண்டைகள் சகஜம்’ என்று பலவிதமாக அவர்களை சமாதானம் செய்தோம். எங்களிடமிருந்து நிறைய வாக்குப் பிரமாணங்களை வாங்கிய பிறகு இருவரும் பழையநிலைக்கு வந்தனர். அன்றிலிருந்து நாங்கள் இருவரும் குழந்தைகள் எதிரில் வாக்குவாதம் செய்வதை குறைத்துக்கொண்டுள்ளோம். குரல் உயராதவாறு பார்த்துக் கொள்ளுகிறோம்’.
எந்த வயதுக் குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தைகளே வளர்ந்து பெற்றோர்கள் ஆன பின்னாலும் தங்கள் பெற்றோர்கள் சண்டையிடுவதை விரும்புவதில்லை. அந்த ஒரு உறவு மட்டும் பாறாங்கல்லைப் போல உறுதியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். நினைவு வைத்துக்கொள்ளுங்கள் பெற்றோர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். இன்னொருவர் எதிரில் மற்றவரை மட்டம் தட்டக் கூடாது. இந்த உறவினைப் பார்த்து வளரும் குழந்தைகள் இவர்கள் மூலமே மற்ற உறவுகளைப் புரிந்து கொள்ளுகிறார்கள். பெற்றோர்கள் சத்தமாக சண்டை போட வேண்டும் என்பதில்லை. தினசரி நடக்கும் வாய்வார்த்தை வாக்குவாதங்கள் கூட குழந்தைகளைப் பாதிக்கும்.
தினசரி சண்டையிடும் பெற்றோர்களைப் பார்த்து சில ஆண்கள் கல்யாணத்தை தவிர்த்துவிடுகிறார்கள். அலுவலகத்திலும் சண்டை என்று வந்தால் ஒதுங்கிவிடுவார்கள். எங்கள் உறவுகாரரின் பிள்ளை ‘எனக்குத் திருமணமே வேண்டாம் நீயும் அப்பாவும் போல நானும் அவளும் சண்டை போட்டுக்கொள்வோம்’ என்று சொல்லிச் சொல்லியே திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். கடைசியில் ஒரு பெண் வந்து அவரிடம் திருமணம் என்றாலே சண்டையும், வாக்குவாதமும் மட்டுமல்ல என்று சொல்லி புரிய வைத்து அவரை மணந்து கொண்டாள்.
சரி, சண்டையே இல்லாத தாம்பத்தியம் இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அம்மா அப்பா சண்டையிட மாட்டார்கள் என்றால் அது போலியான ஒன்று. உண்மையான தாம்பத்தியமாக இருக்க முடியாது. மனத்தாங்கலை மனதினுள் வைத்துக் கொண்டிருப்பது இருவருடைய மனதையும் பாதிக்கும். என்ன செய்வது? சண்டை போடாமலும் இருக்க முடியாது. நாம் சண்டை போட்டால் குழந்தைகளைப் பாதிக்கும். ஒன்றுமில்லாததுபோல குழந்தைகள் எதிரில் நாடகம் போடுவதும் நல்லதல்ல. திருமணம் என்பதில் சண்டை கிடையாது என்று குழந்தைகளுக்கு காட்டுவதால் எந்த நன்மையும் இல்லை. வயது வந்த நமக்குத் தெரியும் இன்று சண்டை என்றால் நாளை சமாதானம் ஆகிவிடுவோம் என்று. ஆனால் குழந்தைகளுக்கு அவர்கள் இப்போது பார்ப்பதுதான் மனதில் நிற்கும்.
என்ன செய்யலாம்? தொடர்ந்து பார்ப்போம் அடுத்த வாரம்.