கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. தற்போது அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இணைய தளங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் நேற்று பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் த்ரிஷா இதனை மறுத்து ‘டுவீட்’ செய்துள்ளார். ‘‘எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன என்றே தெரியவில்லை. நிச்சயதார்த்தம் என்பது என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். அப்படிப்பட்ட ஒரு நாளை சந்தோஷமாக நானே எல்லோருக்கும் முதலில் அறிவிப்பேன். பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் தெலுங்கு படமொன்றின் படப்பிடிப்பிற்காக நான் அரக்கு வேலியில் இருந்தேன். பிறகு எப்படி எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கும்?’’ என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் த்ரிஷா.