கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு அடிப்படையில் இன்று விசாரணை துவங்கியது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா மற்றும் அமிர்தம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அடுத்த வழக்கு விசாரணைக்கு கனிமொழி உள்ளிட்டோர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். முதல் நாள் விசாரணையில், அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அடுத்த கட்ட விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி அளவுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையில் ஆஜராக தயாளு அம்மாளுக்கு நீதிமன்றம் விலக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.