பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் ; வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கும் வகையில், அவற்றில் உள்ள அரசு பங்குகளின் அளவு 52% ஆக குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். வளர்ச்சி மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுக்கு வழிவகுக்கும் இந்த நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை. என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- இந்தியா அடிப்படையில் வேளாண் பொருளாதாரம் சார்ந்த நாடு ஆகும். பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழலிலும் இந்தியாவில் விவசாயம் தான் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.
உற்பத்தித் துறையால் வாழ்வாதாரம் பெறும் மக்களின் எண்ணிக்கை 22 % மட்டுமே. இத்தகைய சூழலில் குறைந்த எண்ணிக்கையிலானோருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் உற்பத்தித் துறையை வளர்ப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலானோருக்கு வாழ்வாதாரம் தரும் வேளாண் தொழிலுக்கு அடிப்படையான நிலங்களை கையகப்படுத்தத் துடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயம் லாபம் தரும் தொழிலாக இல்லாத நிலையில், அத்துறையின் வளர்ச்சிக்கு வகை செய்வது தான் நாட்டின் வளர்ச்சிக்கும், உணவுப்பாதுகாப்புக்கும், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கும் சரியான உத்தியாக இருக்கும். மாறாக பெரும்பான்மையினரின் வாழ்வாதாரத்தை பறித்து வளர்ச்சிக்கு வித்திட முயல்வது சரியா? என ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,‘
‘இந்தியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாகவும், பெரும்பான்மை மக்களுக்கு வேலை அளிக்கும் தொழிலாகவும் திகழும் வேளாண்துறை வளர்ச்சிக்கும், விவசாயிகளின் வருவாய் உயர்வுக்கும் பா.ஜ.க. முன்னுரிமை அளிக்கும். நிலங்களை கையகப்படுத்துவதில் உழவர்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அதற்கு நேர் எதிரான வகையில் வேளாண் விளைநிலங்களையும் கையகப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய முயல்வது விவசாயத்தை அடியோடு அழித்துவிடும். அதுமட்டுமின்றி, நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டத்தை திருத்துவதில் கருத்தொற்றுமை ஏற்படுத்த முடியாவிட்டால், தங்கள் விருப்பப்படி முடிவெடுக்கப்போவதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருப்பது மிகவும் ஆபத்தானது. விளைநிலங்களை கையகப்படுத்துவது விவசாயத்தை அழிக்கும் செயல் என்றால், அதற்காக மத்திய ஆட்சியாளர்கள் கடைபிடிக்கும் அணுகுமுறை ஜனநாயகத்தை அழிக்கும் செயல் ஆகும்.
இத்தகைய அணுகுமுறை நீடித்தால் அது சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக தங்களின் விருப்பத்தையெல்லாம் மக்கள் மீது திணிப்பது நல்லதல்ல. இதுபோன்ற அணுகுமுறையை ஆட்சியாளர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதேபோல், வங்கிகளில் அரசின் பங்கை 52 விழுக்காடாக குறைக்க முயல்வதும் ஆபத்தானது தான். வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதாக மத்திய அரசு கூறினாலும், அதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். தனியாரிடமிருந்து முதலீட்டைப் பெற்று வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதன் மூலம் அதிக அளவில் கடன் வழங்க முடியும் என்ற போதிலும், வங்கிகளின் நிர்வாகம் கிட்டத்தட்ட தனியாரின் கைகளுக்குச் சென்று விடும். அவ்வாறு சென்றால், தனியார் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் வாரி வழங்கப்படும். ஏழை மக்களுக்கு கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடும். பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் திரும்பச் செலுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதால் வங்கிகள் நலிவடையும்.
ஆக்சிஸ் என்ற தனியார் வங்கியின் முன்னாள் தலைவரான பி.ஜே. நாயக் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் இம்மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் தனியாருக்கு சாதகமானவை ஆகும். இவை செயல்படுத்தப்பட்டால், 1969ஆம் ஆண்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் அனைத்து நோக்கங்களும் சிதைத்துவிடும். 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் வலிமையாக இருந்ததற்குக் காரணமே பொதுத்துறை வங்கிகள் தான். அதை சிதைப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் மத்திய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளக்கூடாது.
அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஏற்படுத்துவதே மத்திய ஆட்சியாளர்களின் பணியாக இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் தான் மத்திய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டுமே தவிர இந்திய பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.