இன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம், எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்

’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்

இந்த மாத புத்தகமாக புகைப்படக் கலைஞரும் எழுத்தாளருமான  ராமலக்ஷ்மி எழுதிய இலைகள் பழுக்காத உலகம் கவிதைத் தொகுப்பை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இணையத்தில் வலைத்தள பதிவராக நன்கு அறியப்பட்டவர் ராமலக்ஷ்மி. வீட்டுப் பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் பெண்கள் ராமலக்ஷ்மியை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.  தன்னுடைய இளவயது புகைப்பட ஆர்வத்தை அப்படியே புதைத்துக் கொள்ளாமல் தன்னுடைய மத்திம வயதில் கைகளில் கேமராவுடன் களமிறங்கிய பெண்..! இன்று அறியப்பட்ட பெண் புகைப்படக் கலைஞராக வளர்ந்திருக்கிறார். அதுபோலவே இவருடைய எழுத்துப் பயணமும் குறிப்பிடத் தகுந்தது. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்குப் பிறகு வெகுஜெனத்தை எட்டும் இலக்கிய தரம் மிக்க பெண் எழுத்தாளர்கள் தமிழில் உருவாகவில்லை. அந்தக் குறையை போக்கும் வகையில் இருக்கிறது ராமலக்ஷ்மியின் எழுத்து.  வறட்டுத்தனமான உடல் அரசியலைப் பேசாமல் பசியை வறுமையை சமத்துவத்தை பேசுகின்றன இவருடைய கதைகள், கவிதைகளும் அப்படியே! கவிதைத் தொகுப்பு குறித்து வேறொரு பதிவில் விரிவாகப் பேசுவோம்…இந்த கலந்துரையாடலுக்கு வாசகர்களையும் வரவேற்கிறோம்! இனி ராமலக்ஷ்மியுடன் ஓர் எளிமையான நேர்காணல்…

profile - a
எழுத்தாளர் ராமலக்ஷ்மி

புனைவு எழுதும் எண்ணம் எப்போது தோன்றியது… முதல் முதலில் கதை அல்லது கவிதைக்கான விதை தோன்றிய தருணத்தை பகிர்ந்துகொள்ளுங்களேன்.

பள்ளிக் காலத்தில்..  பத்தாவது படிக்கும் போது சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு, போட்டி நேரத்தில் தரப்பட்டத் தலைப்புக்காக எழுதியதே முதல் சிறுகதை. அனாதைச் சிறுவனைச் சுற்றிய சம்பவங்களாக அமைந்த அக்கதைக்கு முதல் பரிசும் கிடைத்தது. அதே வருடம் பள்ளியின் ஆண்டு மலருக்காக, இயற்கையைப் போற்றி எழுதியதே முதல் கவிதை. ஆக ‘முதன் முதல்’ படைப்புகளுக்கான விதைகள், என்னுள் இருந்த எழுத்து ஆர்வத்தைத் துளிர்க்கச் செய்யும் விதமாக விதைக்கப்பட்டவை எனக் கொள்ளலாம்.

கவிதை, சிறுகதை, தொடர்கதை என்று புனைவின் வெவ்வேறு வடிவங்களை முயற்சித்து பார்க்கும்போது ஒவ்வொன்றுக்குமான எல்லைகளை எப்படி வகுத்துக் கொள்கிறீர்கள்?

கதையாகச் சொல்லக் கூடிய விஷயங்கள் கூட ஒரு கவிதையாய் சிலவரிகளில் சொல்லி விடமுடிகிற போது கவிதையே என் முதல் தேர்வாக உள்ளது.  விரிவாக நம் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டுமென்கிற உந்துதல் வரும்போது கதை வடிவம் என் தேர்வாகிறது.  ஒரு சிறுகதைக்குள் அடக்கி விட முடியாது எனத் தோன்றினால் மட்டுமே தொடராக எடுத்து செல்ல விருப்பம்.

சமீபத்தில் தினகரன் வசந்தம் இதழில் தொடர்கதை எழுதிய அனுபவம் பற்றி… குறிப்பாக வாசகர்களிடம் எவ்வகையான எதிர்வினைகளைப் பெற்றீர்கள்?

தொடருக்கான வாய்ப்பு வந்த போது இது வரை நான் இறங்காத ஒரு களத்தில் இறங்கிப் பார்க்கும் ஆர்வம் வர, சரித்திரத்தை எடுத்துக் கொண்டேன். அதிலும் கூட அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லாத ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். நிறைய ஆய்வும் நேரமும் தேவைப்பட்டது. குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டிய அவசியத்தினால் சொல்ல வந்தததை ஓரளவு சுருக்கமாகவே சொல்லியிருந்தேன். தொடரின் மூலமாகவே இந்த வரலாற்று உண்மைகளை அறிந்து கொண்டதாகப் பலர் என்னிடம் சொன்னபோது திருப்தி கிடைத்தது.

என்னதான் வரலாறு ஆயினும் புனைவாகச் சொல்லிச் செல்லுகையில் எவர் மனதும் புண்பட்டுவிடக் கூடாதென்பதில் கவனம் எடுத்திருந்தேன். இருப்பினும் ஒரு சின்னத் தயக்கம் இருந்து வந்தது. மாறாகத் தொடர் முடிந்ததும் பலரும் பாராட்ட நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

This slideshow requires JavaScript.

புனைவுக்கான கருவை எதிலிருந்து பெறுகிறீர்கள்?

வாழும் சமூகத்திலிருந்து, சுற்றி நடப்பவற்றிலிருந்து, எனது மற்றும் அறிந்தவர்களின் அனுபவத்திலிருந்து, அன்றாட நிகழ்வு குறித்த நண்பர்களின்  பகிர்வுகளிலிருந்து, இயற்கையிடமிருந்து.. மற்றும் பறவைகளையும் பிற உயிர்களையும் அவதானிப்பதில், குழந்தைகளை இரசிப்பதில்..

இத்துடன் நான் மற்றும் நண்பர்கள் எடுக்கும் ஒளிப்படங்களிலிருந்தும். நண்பர்களுக்கு நன்றி சொல்லி அவற்றைப் படைப்புகளோடு பயன்படுத்தியுமிருக்கிறேன். ஒருமுறை ‘கடல் இல்லாத ஊரில் வசிக்கும் நீங்கள் எப்படிக் கடற்கரைக் காட்சிகளை இவ்வளவு நுட்பமாக விவரித்திருக்கிறீர்கள்’ எனக் கேட்டிருந்தார் ஒரு நண்பர்.  அந்தக் கவிதையைத் தந்தது ஃப்ளிக்கர் தளத்தில் தோழி தொகுத்து வைத்திருந்த படங்களே.

உங்கள் படைப்புகள் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து விளிம்பு மனிதர்களை பற்றி அதிகம் பேசுகின்றன. பெண்ணிய எழுத்தில் விரைவில் கவனம் பெறும் சூழல் உள்ள நிலையில் உங்களுடைய இந்த தேர்வுக்கு காரணம் என்ன?

பெரும்பாலான கதைகள் அப்படி அமைந்திருப்பது உண்மைதான். இதைக் குறிப்பாக நான் தேர்வு செய்திருப்பதாகத் தெரியவில்லை. கவனித்துப் பார்த்தால் ஆரம்பநாட்களிருந்தே என் கதைகள் இவர்களைச் சுற்றியதாக இருந்து வந்துள்ளன. ’அடை மழை’ தொகுப்பில் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கதையும் இடம் பெற்றுள்ளது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டமும் அசாதாரணமாக அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதமும் என்றைக்குமே என் மதிப்புக்குரியதாக இருந்து வந்திருக்கிறது.  பெண்ணின் பார்வையில் பெண்களின் பிரச்னைகள் பேசப்பட வேண்டியதும் அவசியமானது. அதையும் செய்தே வருகிறேன், பெண்கள் சிறப்பிதழாக மலரவிருக்கும் ‘சொல்வனம்’ 115-வது இதழுக்கு என் கவிதையும், கதையும் தேர்வாகியுள்ளன. அதே நேரம் ஒரு மனிதராக வாழ்க்கையையும், சக மனிதர்களையும், சமூகப் பிரச்னைகளையும் அணுகிப் பார்க்கிறேன். இதைத்தான் எழுத வேண்டுமென நினைக்காமல் இயல்பாக எனக்கு எதை எழுதத் தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன் என்பதே உண்மை.

பல கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் உலகில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை நூறைக் கூட எட்டவில்லை. இதில் உங்களுக்கான இடம் எப்படிப்பட்டது? அதாவது நீங்கள் இலக்கியத்தில் கவனம் செலுத்துவீர்களா? அல்லது வெகுஜென படைப்புகளில் கவனம் செலுத்துவீர்களா?

எனக்கான இடம் குறித்த கேள்வியோ சிந்தனையோ எழுந்ததில்லை.  தீவிரமாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கவும் இல்லை. இயலும் போது எழுதுகிறேன். இயன்றவரை சிறப்பாகச் செய்ய விரும்புகிறேன். மிச்சத்தைக் காலம் பார்த்துக் கொள்ளட்டும் என நினைக்கிறேன்.

இலக்கியச் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் என் பங்களிப்பு இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில நேரங்களில் நாம் வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்கள் பரவலாகப் பலரையும் சென்றடைய வேண்டியது அவசியம் என நினைக்கையில் வெகுஜனப் பத்திரிகை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

உங்களை ஈர்த்த எழுத்தாளர், உங்களை எழுதத்தூண்டிய எழுத்து யாருடையது?

நான் கதைகள் எழுத ஆரம்பித்த கல்லூரி வயதில் சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரன் கதைகளையே அதிகம் விரும்பி வாசித்திருக்கிறேன். ஒவ்வொருவரின் எழுத்துக்களும் ஒவ்வொரு காரணங்களுக்காகப் பிடித்திருந்தன என்றாலும் இன்னாருடைய எழுத்தே எழுதத் தூண்டியது எனக் குறிப்பாக எவரையும் சொல்ல முடியவில்லை.

ஒரு புனைவை எழுதும் முன் எவ்வகையான தயாரிப்புகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய எழுத்து process பற்றி பகிர்ந்து கொள்ளுங்களேன்…

கவிதையின் கரு என்பது ஒரு செடி மொட்டு விடுவது போல, ஒரு அரும்பு கட்டவிழ்வது போல, மேகங்கள் கூடிய வானில் வெட்டும் மின்னலைப் போல உருவாகிற ஒன்று. முடிந்தவரை உடனடியாக எழுதி வைக்க விரும்புவேன். ஏனெனில் வரிகளும் வார்த்தைக் கட்டமைப்பும் பிறகு எழுதலாமென நினைத்து விட்டு விட்டால் அதே போல் அமைவது இல்லை. எழுதிய கவிதையைச் செதுக்க பிறகு நேரம் ஒதுக்குவேன்.

‘இது ஒரு கதைக்கான கரு’ என முடிவு எடுத்து விட்டால்,  கதைக்களத்தை முடிவு செய்து, கதாபாத்திரங்களை உருவாக்கி, நிகழ்வுகளைச் சேர்த்து,, என ஓரிரு நாட்கள் அல்லது மணிகளில் முழுவடிவத்தையும் மனதிலேயே கொடுத்து விடுவேன்.  அப்படி வடிவம் கொடுத்த பிறகு எழுத்தில் கொண்டு வராமல் போன கதைகளும் பல உண்டு. பிற வேலைகள், பிற துறைகளில் காட்டும் ஈடுபாடு, நேரமின்மை போன்ற காரணங்களைச் சொல்வது தப்பிக்க முற்படுவதே. திருத்திக் கொள்ள முயன்று வருகிறேன்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது விஷயத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையெனில் அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்ட பிறகே எழுதத் தொடங்குவேன்.

Profile - d
‘‘ஒரு படைப்பைப் பொறுத்தவரை எழுதி முடித்ததும் ஏற்படும் மனநிறைவு முக்கியமானது’’

ங்கள் நூல்களை பதிப்பிக்கும் அனுபவம்…

பத்திரிகை வெளியீடுகளையும் சேர்த்து என் வலைப்பக்கத்தில் படைப்புகளைச் சேமித்து வந்தாலும், தொகுப்பாக வாசிக்கும் அனுபவத்தை நண்பர்கள் பெறவும், இணையத்தை உபயோகிக்காதவர்களுக்கும் படைப்புகள் சென்று சேரவும் நூல் வடிவமே உதவும் என்பதால் எடுத்த முயற்சி.

அதீதம் மின்னிதழில் ஒரு சமயத்தில் இ-புத்தகங்களை இடம் பெறச் செய்தபோது அதற்காக மற்றவர்களின் படைப்புகளைத் தொகுத்த அனுபவம் என் படைப்புகளை தொகுக்கும் போது பெரிதும் உதவியது. கவிதைகளைப் பொறுத்தவரை வாழ்வியல், சமூகம், இயற்கை, மனிதர்கள், அன்பு, குழந்தைமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகரும் தொகுப்பில், தொடர்ந்து ஒரே விஷயத்தைப் பற்றியதாக அடுத்தடுத்த கவிதைகள் அமையாமல் பார்த்துக் கொள்ளுமாறு கவிஞர் நிலா ரசிகன் வழங்கிய ஆலோசனையைக் கவனத்தில் கொண்டேன். நூல்களுக்கு மனமுவந்து முன்னுரை வழங்கியிருந்தனர் எழுத்தாளர் ரிஷபனும், கவிஞர் க. அம்சப்ரியாவும்.

சிறுகதைத் தொகுப்புக்கு 18 கொண்டு வரலாமென நினைத்துப் பிறகு 13 கதைகள் என முடிவானபோது கதைத் தேர்வுக்கு உதவினார் பதிப்பாளர் ‘அகநாழிகை’ பொன். வாசுதேவன். நான் எடுத்த ஒளிப்படங்களிலிருந்து அட்டைப் படங்களைத் தேர்வு செய்ததும் அவரே.  ‘அடை மழை என்ற தலைப்புக்கு உச்சி வெயிலில் உறங்கும் மனிதனின் படமா’ என நான் தயங்கிய போது எளிய மனிதர்களின் வாழ்வை அதிகம் பேசும் நூலுக்கு நிச்சயம் பொருந்தி வரும் எனத் துணிந்து முடிவு செய்தார். ஏற்ற அணிந்துரை ஒன்றையும் பின் அட்டையில் வழங்கியிருந்தார்.  தொகுப்பாகக் கையில் எடுக்கையில் அட்டைப்படம் பொருத்தமாகவே அமைந்து போனது. அத்துடன், பதிப்பித்தல் குறித்துச் சம்பிரதாயத்திற்கேனும் நேரில் கேட்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்புகள் இன்றி நூல்களைச் சிறப்பாக வடிவமைத்து, மின்னஞ்சல் மூலமாகவே கேட்ட திருத்தங்களைச் சலிக்காமல் செய்து தந்து, இறுதி வடிவத்தைக் கொண்டு வந்தார், அந்த சமயத்தில் சென்னை செல்லும் சூழல் இல்லாதிருந்த நிலையில் வெளியீட்டையும் புத்தகக் கண்காட்சியில் ஒருங்கிணைத்து நடத்தி விட்டிருந்தார். நேரம் ஒதுக்கிக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர் எழுத்தாளர் சுகா, எழுத்தாளர் தமிழ்நதி, கவிஞர் மதுமிதா, கவிஞர் தி. பரமேஸ்வரி, கவிஞர் அய்யப்ப மாதவன் மற்றும் ’உயிர் எழுத்து’ திரு. சுதீர் செந்தில் ஆகியோர்.

உங்கள் படைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா?

ஒரு படைப்பைப் பொறுத்தவரை எழுதி முடித்ததும் ஏற்படும் மனநிறைவு முக்கியமானது. மற்றவர்களும் அங்கீகரிக்கவே அவற்றைப் பகிருகிறோம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இணையத்தில் வருகைப் பதிவேடும், வாசிக்கும் நண்பர்களின் கருத்துகளும் தொடர்ந்து இயங்க வைக்கும் காரணிகளாக இருக்கின்றன. அவ்வப்போது விருதுகளும், பரிசுகளும் கிடைத்து வந்திருக்கின்றன.

நூல்களைப் பொறுத்த வரையில் சிறுகதைத் தொகுப்பு, கவிதை தொகுப்பு இரண்டையுமே வாசித்தவர்கள் தனி மடலில் அல்லது தங்கள் தளத்தில் பகிர்ந்த கருத்துகள் மனநிறைவைத் தந்தன. கல்கி, தினமணி, தென்றல், ஃபெமினா ஆகிய பத்திரிகைகளில் வெளியான மதிப்புரைகள் நூல்கள் கவனம் பெற உதவின.

இலைகள் பழுக்காத உலகம்” கவிதை நூலுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விருது (2014), முதல் தொகுப்பிற்கான பரிசாக மு. ஜீவானந்தம் பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கிய விருது(2014) என சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. எவ்வகை அங்கீகாரமானாலும் அதைத் தொடர்ந்த செயல்பட வைக்கும் ஊக்கமாக எடுத்துக் கொள்கிறேன்.

உங்கள் நேர மேலாண்மை குறித்து… குறிப்பாக எந்த நேரத்தில் எழுதுவீர்கள்…

பல துறைகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் எல்லாவற்றுக்கும் நேரத்தைப் பிரித்து அளிக்க விரும்பினாலும் ஒவ்வொரு சமயத்தில் ஏதேனும் ஒன்றுடனே ஐக்கியமாகி விடுவதுதான் நடக்கிறது. எழுத்தின் ஓட்டம் தடைப்பட்டு விடாதபடி அழைப்புமணித் தொந்திரவுகள் இல்லாத மதிய நேரத்தில் அல்லது இரவு பத்துமணிக்கு மேலான அமைதியான சூழலில் எழுதுவேன்.
படைப்புகளை ஒரே மூச்சில் எழுதிவிடுவீர்களா? அல்லது எழுதிவிட்டு பிறகு திருத்தி எழுதுவீர்களா?

ஒரே மூச்சில் எழுதுவதே வழக்கம்.  மனதில் வடிவம் கொடுத்தப் பல கதைகளை எழுதாமல் விட்டதன் காரணம், ஒரேமூச்சில் எழுத உட்கார முடியாததுதான். சில நேரங்களில் திருத்தம் தேவைப்படாமல் கவிதைகள் அமைந்து போகும். மற்றபடி கதையானாலும், கவிதை, கட்டுரைகளானாலும் எழுதியதைத் திருத்துவதும் பார்த்துப் பார்த்துச் செதுக்குவதும் வழக்கமே.

ராமலக்ஷ்மியின் வலைப்பூ

ராமலக்ஷ்மியின் நூல்களை வாங்க

 

“’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்” இல் 9 கருத்துகள் உள்ளன

 1. மிக அருமையான நேர்காணல்.
  கேட்கப்பட்ட கேள்விகளும் எளிமையாக இருந்தன. திருமதி ராமலக்ஷ்மியின் பதில்களில் இருந்த யதார்த்தம் மிகவும் கவர்ந்தது.
  நேர்முகம் கண்டவருக்கும், திருமதி ராமலக்ஷ்மிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 2. நேர்காணலுக்கும் நூல்களின் அறிமுகத்திற்கும் நன்றி நந்தினி. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களுடன் ஒப்பிடப்படும் அளவுக்கான தகுதியை வளர்த்துக் கொள்ள நான் வெகுதூரம் பயணிக்க வேண்டும். உங்கள் கருத்தை, எழுதுவதை விட்டு விடாமல் தொடர்வதற்கான ஊக்கமாகக் கொள்கிறேன்.

 3. //இதைத்தான் எழுத வேண்டுமென நினைக்காமல் இயல்பாக எனக்கு எதை எழுதத் தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன் என்பதே உண்மை.//

  இயல்பான நடை அமைவதற்கு நல்ல டிப்ஸ். பல்கலை வித்தகி ராமலக்ஷ்மியின் பேட்டி சிறப்பாக அமைந்திருக்கிறது.

 4. அழகான நேர்காணல், கேள்வியும் பதில்களும் அருமை.

  //ஒரு படைப்பைப் பொறுத்தவரை எழுதி முடித்ததும் ஏற்படும் மனநிறைவு முக்கியமானது. மற்றவர்களும் அங்கீகரிக்கவே அவற்றைப் பகிருகிறோம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.//
  எழுதுபவர்களுக்கு முதலில் தன் எழுத்தில் மனநிறைவு வேண்டும் என்பது உண்மை.

  ராமலக்ஷ்மியின் இந்த பதில் மிகவும் நன்றாக இருக்கிறது.

  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மிக்கு.
  ராமலக்ஷ்மியை நேர்முகம் கண்டவருக்கும் வாழ்த்துக்கள்.

 5. நேர்த்தியான நிதானமான நேர்காணல். எழுதுவதற்கான தூண்டுதல் பற்றியும் எழுத்தின் வடிவாக்கம் பற்றியும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. புதிய படைப்பாளிகளுக்கும் இதில் நல்லதொரு அனுபவப்பாடம் உள்ளது. இலைகள் பழுக்காத உலகம் கவிதை நூலுக்கு விருதுகள் கிடைத்திருப்பது ஒரு மகிழ்ச்சியான அங்கீகாரம். தொடர்ந்து படைப்புகளைத் தாருங்கள். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.