
நீண்ட நாட்களாக சத்யமூர்த்தி பவனை சுற்றிக் கொண்டிருந்த வதந்திக்கு இன்று முற்றுப்புள்ளி கிடைத்திருக்கிறது! காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கப் போவதாக ஜி.கே.வாசன் அறிவித்திருக்கிறார். புதிய கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள ஜி.கே. வாசன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். முன்பு தமிழ் மாநில காங்கிரஸில் இருந்த ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்களும் வாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 18 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு தனது தந்தை மூப்பனார் செய்ததை தற்போது ஜி.கே. வாசன் செய்துள்ளதாக செய்தி சேனல்கள் பரபரக்கின்றன. வழக்கமாக புதிய கட்சி தொடங்கப்படும்போது சொல்லப்படும் ‘மக்கள் நலன் கருதி புதிய கட்சி’ என்று புதிய கட்சி தொடங்கப்படுவதற்கு காரணம் சொல்கிறார் வாசன்.

1996ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மூப்பனார். ஆனால் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அதிமுகவுடன் கூட்டணி என்ற தன் நிலையை மாற்றி கொள்ள முன்வரவில்லை. இதன் விளைவாக 1996ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி உதயமானது தமிழ் மாநில காங்கிரஸ். ஜி.கே.மூப்பனார் தலைமையில் உதயமான தமிழ் மாநில காங்கிரஸ் 96ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 39 பேரவைத் தொகுதிகளிலும், 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வென்றது. ப.சிதம்பரம், அருணாச்சலம், ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், தனுஷ்கோடி ஆதித்தன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, ஞானதேசிகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் தமிழ் மாநில காங்கிரசில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

1996 முதல் 1998 வரையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியில் 5 மத்திய அமைச்சர்களை கொண்டிருந்தது தமிழ் மாநில காங்கிரஸ். 98ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் 99ல் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்து. ஆனால் ஒர் இடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை. பின்னர் 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தமிழ் மாநில காங்கிரஸ் முடிவு எடுத்தது. அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயமான தமிழ் மாநில காங்கிரஸ், மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்கிற அமைப்பை உருவாக்கினார் ப. சிதம்பரம். அதிமுகவுடன் இணைந்து தேர்தல் களம் கண்ட தமிழ் மாநில காங்கிரஸ், 23 இடங்களில் வெற்றி பெற்றது. 2001ம் ஆண்டு உடல் நலன் நலிவுற்ற நிலையில் ஆகஸ்ட் 30ம் தேதி மூப்பனார் காலமானார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஜி.கே.வாசன் 2002ம் ஆண்டு தனது கட்சியை மீண்டும் காங்கிரசுடன் இணைத்தார். இணைப்பு விழா மேடையிலேயே ஜி.கே.வாசன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும் இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார் ஜி.கே.வாசன். இந்த சூழலில் காங்கிரஸ் மேலிடம் மீது ஏற்பட்ட அதிருப்தியால், 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் காங்கிரஸில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளார்.

மூப்பனார் தனிக் கட்சி தொடங்கியபோது அதிமுக மீதான வெறுப்பு கட்சிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது. ஆனால் தற்போது திமுக, அதிமுக மீது குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அது இந்தக் கட்சிகளைத் தவிர்த்த பாஜக,மதிமுக, பாமக கட்சிகள் இணைந்த கூட்டணிக்குக்கூட சாதகமாக அமையவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரும் பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது பாஜக. தமிழகத்திலோ பாஜக கூட்டணி 2 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. தனித்து விடப்பட்ட காங்கிரஸோ படு தோல்வியைச் சந்தித்தது. விஜயகாந்த், பழ.நெடுமாறன், சீமான், தமிழருவி மணியன் என அரசியல்-சினிமா பிரபலங்கள் ஆரம்பித்த சமீப புதுக் கட்சிகளால் மக்கள் மத்தியில் எந்தவித மாற்றத்தையும் நம்பிக்கையும் உருவாக்கிவிட முடியவில்லை. இந்நிலையில் வெறுமனே உட்கட்சி பூசல் காரணமாக தொடங்கப் போகும் புதுக்கட்சி தமிழக மக்களின் ஆதரவு கிடைக்குமா என்பது பற்றி பேச எதுவும் இல்லை. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியின் மிகப்பெரிய ஊழலும் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்திக்கக் காரணமானதுமான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்தபோது தனது கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியைத் துறந்து புதுக் கட்சி ஆரம்பித்திருந்தால் மக்களிடம் நம்பிக்கை பெற்றிருக்கலாம். ஆட்சியின் இறுதி நாள் வரை பதவியை அனுபவித்துவிட்டு கட்சி பூசலால் வெளிவந்த ஜி. கே. வாசன், தந்தைக்குக் கிடைத்த பேராதரவு (இந்த பேராதரவையும் மூப்பனார் திமுகவுடன் கூட்டணி அமைத்து வீணடித்தார் என்பது வரலாறு) தனக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது கானல் நீராகத்தான் இருக்கும்!