மாநிலத் தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உரிய மதிப்பும், அதிகாரமும் அளிப்பதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து பி.எஸ். ஞானதேசிகன் பகீர் குற்றம்சாட்டுகளுடன் விலகியிருக்கிறார். மக்களவை தேர்தலிலும் அதையடுத்து நடந்த மாநில தேர்தல்களிலும் பதவியை இழந்ததோடு படுதோல்வியை சந்தித்து வருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் மேலிடத்தின் நிலைமை குறித்து பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்கள் முனுமுனுப்புகளை முன்வைத்தபடி இருக்கின்றனர். இந்நிலையில் கோஷ்டி பூசல்களுக்கு பெயர்போன தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தனது ராஜினாமா மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பி. எஸ். ஞானதேசிகன். தனது விலகல் குறித்து பேசும்போது அடுக்கடுக்காக அவர் பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

‘‘காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் என் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தனர். 16-11-2011-இல் தலைவராகப் பதவியேற்றது முதல் இந்த மூன்றாண்டுகளில் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளேன். அனைத்துத் தலைவர்களையும் அழைத்து தமிழகம் முழுவதும் 10-க்கும் அதிகமான பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்களையும், மாவட்டங்களில் 30-க்கும் அதிகமான பொதுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளேன்.
பதவி பெற்றவர்கள் கட்சிப் பணியாற்றுவதில்லை. கட்சிக்காக உழைப்பவர்களுக்குப் பதவி கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. மாநிலத் தலைவர் பதவியை கட்சி மேலிடம் முக்கியப் பதவியாக கருதுவதில்லை. மாநில உணர்வுகள், மாநிலப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத் தலைவரான எனக்குத் தெரியாமல் ஒரு கட்சியுடன் கூட்டணிப் பேச்சு நடத்தினார்கள். அதுபோல எனக்குத் தெரியாமலேயே மாநிலப் பொதுச் செயலாளராக ஒருவரை நியமித்தனர். இதுபோல மதிப்பும், அதிகாரமும் இல்லாமல் இருந்தால் மாநிலத் தலைவரால் எவ்வாறு செயல்பட முடியும்?
புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக கடந்த ஆண்டு 10 லட்சம் உறுப்பினர் அட்டைகள் அச்சிட்டோம். ஆனால், அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். மாநிலத்தில் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த தலைவர்களை முன்னிறுத்தாமல் கட்சியை வளர்க்க முடியாது. தமிழகத்தில் காமராஜரையும், மூப்பனாரையும் முன்னிறுத்தாமல் காங்கிரஸ் வளராது. கடந்த 28-ஆம் தேதி டெல்லி சென்றபோது அகமது பட்டேலைச் சந்தித்து ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாகக் கடிதம் கொடுத்தேன். அதன் பிறகு, அக்டோபர் 30 இல் ராஜிநாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பினேன்’’ என்று தெரிவித்ததோடு, தலைமையை மதிப்பதில்லை என்று ப. சிதம்பரம் மீது புகார் கூறியிருக்கிறார்.
‘‘மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் ப. சிதம்பரம் பங்கேற்பதில்லை. காமராஜர் சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை. ஆனால், மாநிலத் தலைவரான எனக்குத் தெரியாமல் பல மாவட்டங்களுக்குச் சென்று கூட்டங்களை நடத்தினார். அதுபோல, கட்சிப் பதவியில் உள்ள பலர் மாநிலத் தலைவரை மதிப்பதே இல்லை. அவர்களை அழைத்து ஒற்றுமையாகக் கட்சிப் பணியாற்றுமாறு மேலிடம் எச்சரித்திருக்க வேண்டும். ஆனால், மேலிடப் பொறுப்பாளர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. கட்சிக்காக எதையும் செய்யாமல் டெல்லிக்குச் சென்று குறை சொல்பவர்களிடம் கதை கேட்டு, அதன்படி செயல்பட்டால் மாநிலத் தலைவரை யார் மதிப்பார்கள் என்று தன் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார் ஞானதேசிகன்.

இதனிடையே ஞானதேசிகன் ராஜினாமாவுக்கு அடுத்த நாளே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்நியமிக்கப்பட்டுள்ளார். இளங்கோவனை நியமித்து சோனியா காந்தி உத்தரவிட்டதாகவும் ஞானதேசிகனின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார். பதவியேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பணியாற்றுவேன் என்று கூறியிருக்கிறார். ஜி.கே.வாசனும் ப.சிதம்பரமும் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகும் நிலையில் புதிய தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சவாலான சூழல் காத்திருக்கிறது!
சிறந்த பகிர்வு
தொடருங்கள்