வங்கி ஏ.டி.எம். சேவைக்கு கட்டணம் வசூலிப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏ.டி.எம். சேவையை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதுதான் இதுவரை இருந்த நடைமுறையாகும். அதுமட்டுமின்றி மற்ற வங்கிகளின் ஏ.டி.எம் சேவையை மாதம் 5 முறை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
ஆனால், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.களில் மாதம் 5 முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் மாதம் 3 முறையும் மட்டுமே சனிக்கிழமை (நவ.1) முதல் கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் தங்களது வங்கியின் ஏ.டி.எம். சேவையைப் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளில் கணக்கு தொடங்குவதன் நோக்கமே தங்களிடம் உள்ள பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதற்கும்தான். இதற்குத் தேவையான வசதிகளைக் கட்டணமின்றி செய்து தர வேண்டியது வங்கிகளின் கடமையாகும். ஏனெனில், வாடிக்கையாளர்கள் சேமித்து வைக்கும் பணத்தினால்தான் வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன. இந்த பணத்துக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கும் வங்கிகள், மற்றவர்களுக்குக் கடனாக வழங்கி 18 சதவீதம் வரை வட்டி வசூலித்து லாபத்தைக் குவிக்கின்றன. எனவே, ஏ.டி.எம். சேவைக்கான புதிய கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சிறந்த பகிர்வு
தொடருங்கள்