“பதவி நிலைத்திடவாவது; பதறி எழுவீர்!” என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளது, மக்களை ஏமாற்றியாவது பதவியை அடைந்திட இயலுமா என்ற பதற்றத்தில் எழுதியுள்ள அறிக்கையாகவே அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கருணாநிதிக்கு பதிலளிக்கும் வகையில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதறிய காரியம் சிதறும்” என்பது பழமொழி. இந்த பழமொழிக்கேற்பத் தான் கருணாநிதியின் அறிக்கையும் உள்ளது. தமிழக அரசு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை துவங்கிய பின் எடுத்த மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ளாமல், கற்பனை குதிரையை ஓடவிட்டு, கட்டுக் கதைகளும், புளுகு மூட்டைகளும் அடங்கிய ஒரு வெற்று அறிக்கையை அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற அற்ப எண்ணத்தில், பதற்றத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
கருணாநிதியின் அறிக்கை முழுவதும் கற்பனைக் கதையே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாநிதி தனது அறிக்கையில், அமைச்சர்களோ, அதிகாரிகளோ வெள்ளப் பகுதிகளை பார்வையிடவில்லை என்று கூறி இருக்கிறார். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 20 மாவட்டங்களுக்கு உயர் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் அங்குள்ள வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நடைபெற்ற மீட்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் உன்னிப்பாக கவனித்தனர்.
அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் வெள்ளப் பகுதிகளைச் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துள்ளனர்.
இது தவிர, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்கள் துறை சார்பான அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்துள்ளனர். இது தவிர, மாநகராட்சிகளின் மேயர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவும் உறுதுணையாக இருந்துள்ளனர். இவையெல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வெளி வயதுள்ளன. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இவற்றை எல்லாம் மூடி மறைத்து அறிக்கை வெளியிட்டாலும், அதனைப் படித்து ஏமாந்து போக தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை என்பதை கருணாநிதி உணர்ந்து கொள்ள வேண்டும். தி.மு.க.வினரின் இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களுக்கு கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழக மக்கள் தக்கப் பாடம் புகட்டியும், அதிலிருந்து எந்தப் பாடத்தையும் கருணாநிதி கற்றுக் கொள்ளவில்லை.
அடுத்தபடியாக, டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி. இது உண்மைக்கு மாறான தகவல். உண்மை நிலை என்னவென்றால், சுமார் 53,000 ஏக்கர் நிலப் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மட்டுமே நீரில் மூழ்கி உள்ளதாக தகவல் வரப் பெற்றுள்ளது. வெள்ள நீர் வடிந்த பிறகு பயிர்ச் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாநிதி தனது அறிக்கையில், ரோமாபுரி தீப்பற்றி எரியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருயத நீரோவைப் போல, மாநகர மக்கள் எண்ணற்ற பிரச்னைகளினால் திக்கித் திணறிக் கொண்டிருக்கும்போது, மேயர் சாதனை சாகசத்தில் சந்தோஷப்பட்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியின் மூன்றாண்டு சாதனைகளை பட்டியலிடுவது என்பது வேறு, கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வது என்பது வேறு. இந்த இரண்டு பணிகளையும் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது சென்னை மாநகராட்சி.
மதுரையில் பத்திரிகை அலுவலகம் தீப்பற்றி எரிக்கப்பட்டு, மூன்று அப்பாவி ஊழியர்கள் மரணமடைந்தபோது வாய்மூடி மவுனியாக இருந்ததோடு, இந்தச் சம்பவத்திற்கு காரணமான இரு குடும்பங்கள் இணைந்தபோது “கண்கள் பனித்தன, இதயம் இனித்தது” என்று சொன்ன நீரோ கருணாநிதி ரோமாபுரி நீரோவை சுட்டிக்காட்டி பேசியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.