செல்வ களஞ்சியமே -74
ரஞ்சனி நாராயணன்

போன மாதம் ஒரு திருமண ரிசப்ஷனுக்குப் போய்விட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். எங்களுடன் கூட எங்கள் பக்கத்துவீட்டு இளம் தம்பதிகளும் அவர்களது 7 வயது குழந்தையும். அந்தக் குழந்தையின் அப்பா காரோட்டிக்கொண்டு வந்தார். இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. அன்று சனிக்கிழமை. ஒரு தெருவில் நுழைந்த போது நான்கு போலீஸ்காரர்கள் காரை நிறுத்தினார்கள். ஒரு கருவியை குழந்தையின் அப்பா அருகில் பிடித்து ‘ஊதுங்க ஸார்’, என்றார்கள். காரின் உள்ளே எங்களைப் பார்த்துவிட்டு சட்டென்று பின்வாங்கி ‘போகலாம் ஸார்’ என்று அனுப்பிவிட்டார்கள். இந்தக் குழந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தவன், ‘ஏன் போலீஸ் மாமா உன்னை ஊதச் சொன்னார்?’ எங்களுக்கு சிரிப்பு வந்தாலும் அவர் எப்படி தன் குழந்தையை சமாளிக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. ‘ஜலதோஷம் இருக்கான்னு பார்க்க…’ என்றார். அடக்க முடியாமல் சிரித்து விட்டோம். ‘ஜலதோஷம் இருக்கான்னு போலீஸ் ஏன் பாக்கணும்?’ அப்பாவிற்கு பதில் சொல்லத்தெரியவில்லை. ‘கார் ஓட்டும்போது பேசாத ஸ்ரீநிகேத்’ என்று அடக்கினார்; ‘ஜலதோஷம் இருந்தால் போலீஸ் என்ன பண்ணுவா?’ குழந்தை விடாமல் கேட்டான். ‘டாக்டர்கிட்ட போகச் சொல்லுவா’, இப்போது அம்மா பதில் சொன்னார். ‘ஜலதோஷம் வரதுக்கும், போலீஸுக்கும் என்ன சம்பந்தம்?’ குழந்தையின் இந்தக் கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை!
கேள்விகள், கேள்விகள், இன்னும் கேள்விகள். விடாமல் கேள்விகள். இந்தக் கால பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவால் இந்த மாதிரி கேள்வி கேட்கும் குழந்தைகளை சமாளிப்பதுதான். கேள்விக்கணைகளை தொடுக்கும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? அதுவும் பதில் சொல்ல நாம் தயங்கும் கேள்விகளை என்ன பதில் சொல்லி சமாளிப்பது? குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி சமாளிக்கும் பெற்றோர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாமென்றால் இன்றைக்கு பாதிப் பெற்றோர்களுக்கு மேல் டாக்டர் பட்டம் பெற்றிருப்பார்கள். பிறக்கும்போதே மின்னஞ்சல் முகவரி, சமூக வலைதளத்தில் தங்களைப்பற்றிய குறிப்பு, கையில் எப்போதும் கைபேசி என்றிருக்கும் இந்தக் காலக் குழந்தைகளை எப்படி தடுத்து நிறுத்துவது?
அந்தக்காலத்தில் குழந்தைகள் கேள்விகளே கேட்கவில்லையா? நிச்சயம் கேட்டார்கள். கிடைத்த பதிலில் திருப்திபட்டார்கள் என்று சொல்லலாமா? அல்லது அம்மா அப்பாவின் திட்டுக்களுக்கு பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்தார்களா? காலம் நிறைய மாறியிருக்கிறது என்பதை நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். புகைப்படங்கள் அந்தக் காலத்தில் எப்படி சேமிக்கப்பட்டன? இப்போது எப்படி சேமிக்கப்படுகின்றன? எல்லாமே டிஜிட்டல் மயம் ஆகிவிட்டது. அழும்போது எப்படி சமாதானப்படுத்தினார்கள் அந்தக் காலத்தில்? இப்போது குழந்தையின் கையில் உங்கள் அலைபேசியைக் கொடுங்கள். குழந்தை கப்பென்று வாயை மூடிக் கொள்ளும். தொழில் நுட்பமயமாகிவிட்டது வாழ்க்கை. இது நல்லதா கெட்டதா என்றெல்லாம் கேட்கவே முடியாது.
‘தங்கச்சி பாப்பா எப்படி வரும்?
‘உம்மாச்சி கொண்டு வந்து கொடுப்பா’
‘அம்மா ஏன் ஆஸ்பத்திரிக்கு போறா?’
‘பாப்பாவ கொண்டு வர…’
‘எதுக்கு ஆஸ்பத்திரிக்குப் போகணும்? உம்மாச்சியை வீட்டுக்கே பாப்பாவ கொண்டு வந்து கொடுக்கச் சொல்லேன்…!’
‘ஹோம்வொர்க் முடிச்சியா? அத மொதல்ல முடி. அப்புறம் பேசலாம்…!’
எப்படி இத்தனை கேள்விகள் கேட்கின்றன இந்தக் குழந்தைகள்? இன்றைய ஓவர்-மார்ட் குழந்தைகளுக்கு பெற்றோர்களிடமிருந்துதான் இந்த இன்டலிஜென்ஸ் வருகின்றன என்கின்றனர் க்வீன்ஸ்லாந்து பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள். நம் குழந்தைகளின் இந்த அறிவுத் திறனுக்கு 40% வரை பெற்றோர்களே காரணம் என்கின்றன டாக்டர் பெபேன் பென்யமின்னும் (Beben Benyamin) அவரது சகாக்களும் செய்த ஆராய்ச்சிகள். நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 18000 குழந்தைகளின் (6 லிருந்து 18 வயது) DNA மாதிரிகளையும், இந்தக் குழந்தைகளின் IQ மதிப்பெண்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது FNBPIL என்ற ஒரு ஜீன் இந்த இளம் மேதாவிகளின் அறிவுத்திறனுடன் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதே ஜீன் தான் ஒரு குழந்தை பெரியவன் ஆனவுடன் அவனது அறிவுத் திறன் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் உதவியதாம். உங்கள் வீட்டில் மேரி க்யூரி பிறந்திருக்கிறாள் என்றால் தவறு உங்களுடையதுதான்!
‘நேற்றைக்கு அவளோட பாட்டிக்கு எப்படி ஐ-பாட் (iPad) ஐ பயன்படுத்த வேண்டுமென்று இவள் தான் சொல்லிக்கொடுத்தாள்’ என்று நீங்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் உங்களுடைய ஸ்மார்ட் போன் பற்றி உங்களைவிட உங்கள் குழந்தைக்கு அதிகம் தெரியும் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டே ஆகவேண்டும். அவளது ஓவர்-ஸ்மார்ட் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்வது இன்னும் நல்லது. ஆசிரியர்களும் கண்டு நடுங்கும் உங்கள் குழந்தையை கையாளுவது அப்படியொன்றும் கடினமானது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்ல வேண்டுமென்பது இல்லை. ‘உன் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லையே. இணையத்தில் பார்த்து சொல்லுகிறேன் நாளைக்கு’ என்று சொல்லுங்கள். நிச்சயமாக அடுத்த நாள் பதில் சொல்ல வேண்டும் நீங்கள்.
குழந்தைகளின் நேர்மறையான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பெற்றோர்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் அவ்வளவுதான் என்கிறார்கள் ‘ஸ்மார்ட் பேரண்டிங் ஃபார் ஸ்மார்ட் கிட்ஸ்’ புத்தகத்தின் ஆசிரியர்கள் எல்லன் கென்னடி மூர் மற்றும் மார்க் லோவேன்தால். ஸ்மார்ட் குழந்தைகளை சமாளிக்க பள்ளிப் படிப்பைவிட சற்று கூடுதல் அறிவுத்திறன் இருந்தால் போதும் என்னும் இவர்கள் தரும் அறிவுரைகளைப் பார்ப்போம் வரும் வாரத்தில்.
சிறந்த உளநல வழிகாட்டல்
தங்கள் பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்துள்ளேன்.
http://wp.me/p3oy0k-5L
தொடருங்கள்
வாருங்கள் யாழ்பாவாணன்!
உங்கள் தளத்தில் அறிமுகம் செய்ததற்கு நான்குபெண்கள் சார்பில் மனமார்ந்த நன்றி!
இணைப்பைக் கொடுத்ததற்கு நன்றி!