
கனிமவள முறைகேடு தொடர்பாக விசாரித்து ஆய்வு செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோரும் அனைத்து வசதிகளையும் 4 நாள்களுக்குள் செய்து தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிமவள முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மேலும், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த முறை நடந்தபோது, தமிழகம் முழுவதும் நடைபெறும் கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்வதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்தச் சுரங்கங்களை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு கடந்த மாதம் 18-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி கனிமவள முறைகேடு குறித்து தமிழக அரசு, வருவாய்த் துறைச் செயலர் தலைமையில் குழு அமைத்து விசாரித்தது. இது தொடர்பாக விரிவான பதில் மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதைக் கருத்தில் கொள்ளாமல் புதிதாக ஒரு ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதாடினார்.
தமிழக அரசின் தலைமைச் செயலர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்குச் செலவுக்காக ரூ. 10 ஆயிரத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். மேலும், முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோரும் அனைத்து வசதிகளையும் தமிழக அரசு நான்கு நாள்களுக்குள் அவருக்குச் செய்து தர வேண்டும். அதில் ஏதேனும் குறைபாடுகளை உணர்ந்தால் சகாயம் நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.