பால் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி, தேமுதிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். அதில், ‘பால் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது சாதாரண மக்களைப் பெரிதும் பாதிக்கும். அதிமுக அரசு பதவி ஏற்றபோது பால் விலை லிட்டர் ரூ. 17 ஆக இருந்தது. இப்போது ரூ. 34 ஆக உயர்ந்து இருக்கிறது. பால் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை உயர்த்துவதை விடுத்து, பாலில் கலப்படம் செய்த வைத்தியநாதனின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, ஆவின் நிறுவனத்துக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யலாம்.
ஏற்கெனவே, மின் கட்டணம், பஸ் கட்டண உயர்வால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மக்கள் அமைதியாக இருக்கின்றனர் எனக் கருத வேண்டாம். மக்களின் மவுனப் புரட்சி எதையும் சாதிக்கும்.
மக்களின் முதல்வர் என்றால் காமராஜர், அண்ணாதான். ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் அண்ணாவின் படங்களை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.
பால் விலையைக் குறைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடக்கும். 1 ரூபாய், 2 ரூபாய் குறைத்தால் ஏற்க மாட்டோம். உயர்த்தப்பட்ட பால் விலையை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர். தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி உள்பட அக்கட்சியினர் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.