ஹரியானா முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, அம்மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பாரதிய ஜனதா 47 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 15 இடங்களை மட்டுமே பெற்று, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மற்ற 9 இடங்களில் 5 சுயேட்சைகள் உட்பட இதர வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
வாக்கு சதவிகித அடிப்படையில், பாரதிய ஜனதா 33.2 சதவிகித வாக்குகளையும், இந்திய தேசிய லோக் தளம், 24.1 வாக்குகளையும் பெற்றுள்ளன. பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்றதை அடுத்து முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மேற்பார்வையாளர்களாக வெங்கையா நாயுடுவும், தினேஷ் ஷர்மாவும் பங்கேற்றனர். கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மனோகர் லால் ஹரியானா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
60 வயதான கடாரி, கடந்த 40 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பொறுப்புகளில் இருந்துள்ளார். இவரை ஹரியானா மாநில முதல்வராகத் தேர்வு செய்து அறிவித்தது சண்டிகரில் இன்று கூடிய பாஜக சட்டமன்றக் குழு. இதையடுத்து, பஜன்லாலுக்குப் பின்னர் கடந்த 18 ஆண்டுகளில் ஹரியானா மாநிலத்தில் ஜாட் இனத்தார் அல்லாத முதல் முதல்வர் என்ற சாதனையைப் படைக்கிறார் கடார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் கர்னல் தொகுதியில் போட்டியிட்டு 63,736 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.