தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இன்று 5வது நாளாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரத்து 652 சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரத்யேகமாக 3 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளின் வருகையை கண்காணிக்க, போக்குவரத்து கழகம் சார்பில் 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் 1 முதல் 6 வரையிலான நடைமேடையில் முன்பதிவு செய்த பேருந்துகளும், 7 முதல் 9 வரையிலான நடைமேடையில் முன் பதிவு செய்யாத பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்காணிக்க 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிக கட்டணம் வசூலித்த 32 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய , 500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பண்டிக்கைகாக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் ஊர் திரும்ப ஏதுவாக நாளை இரவு முதல் 26ஆம் தேதி வரை 9,088 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.