டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியது. சர்வதேச நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் டீசல் விலை நேற்று நள்ளிரவு, லிட்டருக்கு ரூ. 3.37 குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். மத்திய அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நிலவும் விலைக்கேற்ப இந்தியாவில் டீசல் விலையை இனிமேல் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும். அதாவது, மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டதற்கு பதிலாக, சர்வதேச சந்தையில் நிலவரத்துக்கேற்ப டீசல் விலையை உயர்த்துவதா? அல்லது குறைப்பதா? என்பதை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்யும். கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டது. அதற்குப் பிறகு, டீசல் விலை தற்போதுதான் குறைக்கப்பட்டுள்ளது.