வீட்டிலேயே தீபாவளிப் பட்சணங்கள் செய்ய எளிய குறிப்புகள் தருகிறார் காமாட்சி மகாலிங்கம்.

1. காரமுருக்கு
வேண்டியவைகள்
அரிசிமாவு – 1கப்
கடலைமாவு – இரண்டரை கப்
மிளகாய்ப்பொடி – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
ருசிக்கு – உப்பு
சீரகம் – அரை டீஸ்பூன்.
வாசனைக்குப் பெருங்காயம்.
முருக்கு வேகவைப்பதற்காக வேண்டிய எண்ணெய்
செய்முறை
இரண்டு மாவுகளையும் சலித்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். வெண்ணெயைச் சற்று சூடு செய்து இளகின பதத்தில் மாவுடன் சேர்க்கவும். எள்,மிளகாய்ப்பொடி, பெருங்காயப்பொடி, சீரகம், இவைகளையும் கலக்கவும். மொத்தமாவையும் இரண்டாகப் பிரித்துக் கொண்டு,ஒருபகுதிமாவை திட்டமாக உப்பு,தண்ணீர் சேர்த்துப் பிசையவும். நன்றாக மென்மையாகப் பிசையவும். முருக்கு பிழியும் பதத்திற்குத் தக்க அழுத்திப் பிசையவும். முருக்கு அச்சை சுத்தம் செய்து தயாராக இருப்பதில், உள்ளேயும் லேசாக எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அச்சினுள் மாவை நிரப்பி காயும் எண்ணெயில் முருக்குகளாகப் பிழியவும். பாதி வேகும் போதே முருக்குகளைத் திருப்பி விடவும்.
காயும் எண்ணெயிலிருந்துஒரு டேபிள்ஸ்பூன்அளவிற்குஎண்ணெயை பிசைந்த மாவில் விட்டும் நன்றாகப் பிசையவும். கரகரவென்ற பதத்தில் முருக்குகளை வேகவிட்டு எடுக்கவும்.
டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் நீக்கவும். முருக்கும் ருசியாக இருக்கும். வேலையும் சுலபமாக இருக்கும். அடுத்து மற்ற பங்கு மாவையும் இதே முறையில் பிசைந்து முருக்குகளாகப் பிழிந்து எடுக்கவும்.
மாவை மொத்தமாகப் பிசைந்து விட்டால் முருக்குகள் சிவக்க ஆரம்பித்து விடும். ஆதலால் திட்டமாக இரண்டு முறையாகப்
பிழியச் சொல்லியுள்ளேன். வெண்ணெய், காய்ந்த எண்ணெய் சேர்ப்பது முருக்கு கரகரப்பாக வருவதற்குதான்.
2. தேன்குழல்
மிகவும், சுலபமான, எளிமையான தேன்குழல் தயாரிக்க அதிக சாமான் தேவையில்லை. ஆனால் மெஷினில் கொடுத்து அரைக்க வேண்டிய காரியங்களை நாம்தான்பார்க்க வேண்டும். அதிகம் ஒன்றுமில்லை. ஆறு பங்கு பச்சரிசியுடன் ஒரு பங்கு வெள்ளை உளுத்தம் பருப்பு சேர்த்துக் கலந்து மெஷினில் கொடுத்து மெல்லிய மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை நன்றாக சலித்தும் வைத்துக் கொண்டால் அவ்வப்போது எது செய்வதானாலும் உபயோகமாக இருக்கும். முள்ளில்லாத சாதாரண வில்லைகளைக் கொண்டுஇதைத்தயாரிக்கலாம். எண்ணெயும் அதிகம் சிலவாகாது. அரிசிப் பண்டமாதலால் உடலுக்குக் கெடுதலும் விளைவிக்காது. குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடும்.திரட்டுப்பாலும்,தேன்குழலும் உடல்நலத்திற்கு கெடுதல் செய்யாத பொருள்கள்.
வேண்டியவைகள்
கலந்தரைத்த மாவு -2கப்
வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
சீரகம்-1 டீஸ்பூன்
வெள்ளை எள்-1 டீஸ்பூன்
ருசிக்கு-உப்பு
பெருங்காயப்பொடி-சிறிது.
தேன்குழல் வேகவைத்தெடுப்பதற்கான எண்ணெய்
செய்முறை
மாவு,சீரகம்,தளர்த்திய வெண்ணெய்,பெருங்காயப்பொடி,எள் உப்பு ஜலம் சேர்த்து சிறிது,சிறிதாகத் தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில்,மாவை மிருதுவாகப் பிசையவும். காய்ச்சிய எண்ணெயும் 1 டேபிள்ஸ்பூன் விட்டுப் பிசையலாம். குழலில் போட்டு சற்று சுலபமாக பிழியும் அளவிற்கு மாவு தளர இருக்கலாம். ஜலம் அதிகமானால் கரகரப்பு வராது.முள்ளில்லாத ப்ளெயினான துளை உள்ள வில்லையை முருக்கு அச்சில் போட்டுத் தேன் குழல் தயார் செய்ய வேண்டும். முருக்கு அச்சில் எண்ணெய் தடவி, முக்கால் பாகம் மாவை நிரப்பி வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நிதான தீயில் தேன்குழல்களைப் பிழிந்து திருப்பி விட்டு கரகரப்பான பதத்தில் எடுத்து வைக்கவும். எண்ணெயை வடிக்கட்டியபிறகுகாற்று புகாத அழுத்தமான மூடியுடைய டப்பாக்களிள் எடுத்து வைக்கவும். இது வரை ருசி பார்க்கவில்லையா? ருசி பார்க்கவும்.
3. மாலாடு
வேண்டியவைகள்:
நல்ல புதியதான பொட்டுக்கடலை – 1 கப் (தமிழ்நாட்டு சட்னி புகழ் பொட்டுக் கடலைதான்!)
.சர்க்கரை – 1கப்
பாதாம்,முந்திரி,பிஸ்தா வகைகள் – வகைக்கு 8 எண்ணிக்கை (என்னிடமிருந்தது போட்டேன்)
ஏலக்காய் – 3
நெய் – இரண்டு கரண்டிக்கு அதிகமாகவே இருக்கலாம் (வெண்ணெய் வாங்கி காய்ச்சிய நெய்யாக இருந்தால்மணமாகவும் ருசியாகவும் இருக்கும். செய்வது செய்கிறோம். முதல் தரமாக இருக்கட்டுமே.)
செய்முறை:
பொட்டுக்கடலை கடையில் வாங்குவது சற்று நமுத்தமாதிரிதான் இருக்கும். அதனால் நிதான சூட்டில் வெறும் வாணலியில், பொட்டுக்கடலையை லேசாக வறுத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துச் சலித்துக் கொள்ளவும். இந்த முந்திரிவகையறாக்களை, துளி நெய்யில் வறுத்து அதையும் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். ஏலக்காயை உரித்துப்போட்டு, சர்க்கரையையும் மிக்ஸியில் பொடிக்கவும். ஆக எல்லாம் பொடிமயமாகத் தயார்.
ஒரு அகலமான தாம்பாளத்தில் இவைகளை ஒன்று சேர்த்துக் கலக்கவும். பாதி கலவையைத் தனியாகப் பிரித்து எடுத்து வைக்கவும்.சின்ன வாணலியில் நெய்யை நன்றாகச் காய்ச்சவும்.. பாதி நெய்யை தாம்பாளத்திலுள்ள கலவையின் மேல் பரவலாகக் கொட்டவும். அகலமான கரண்டியினால் மேலும் கீழுமாகக் கலக்கவும்.
நெய்யின் சூட்டில் சர்க்கரை இளகி கலவை உருண்டை பிடிக்க முடியும். மாவுக் கலவையை அழுத்தமாகச் சேர்த்துக் கலந்து,சற்று சூடு இருக்கும்போதே அழுத்திப் பிடித்து லட்டுகளாகப் பிடிக்கவும். மிகுதிக் கலவையையும்,இம்மாதிரியே நெய்யைக் காய்ச்சி விட்டு லட்டுகளாகச் செய்யவும்.நெய் இரண்டொருஸ்பூன் அதிகமாகவும் வேண்டியதாக இருக்கலாம்.
ஏலக்காய்,முந்திரி பாதாம் ருசி அமர்க்களமாக இருக்கும்.ருசியாக இருக்கா?
பயத்தம் பருப்பில் செய்வதானால்,பருப்பை நன்றாக சிவக்க வறுத்து அரைத்துச் செய்யவும். பயத்தம் லாடு அதன் பெயர்.
ரவையை சிவக்க வறுத்து அரைத்து, மற்றெல்லாம் இதே கணக்கில் சேர்த்து இதே முறையில் செய்யலாம். இது ரவை லட்டு.
ஆக மொத்தம் மூன்று குறிப்புகளைச் சொல்லாமல்ச் சொல்லுகிறது இந்தக் குறிப்பு.
மேலும் சில தீபாவளி பட்சணக் குறிப்புகள் இங்கே…
4. ரிப்பன் பகோடா
5. காரசாரமான கதம்பம்
நாளை தீபாவளி. எவ்வளவு பேருக்கு உபயோகமாக இருந்ததோ? /யாவருக்கும்
தீபாவளி வாழ்த்துகள். அன்புடன்