
பண்டிகை காலங்களில் வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள் சிலவற்றை செய்யக் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். முதலில் நாம் பார்க்க இருப்பது மிதக்கும் விளக்கு செய்முறையை…
வீடியோ செய்முறை கீழே…
தேவையான பொருட்கள்: சிறிய மெழுகுவர்த்தி, வட்ட வடிவ தெர்மோகோல் துண்டுகள், மெழுகு தடவிய தீக்குச்சிகள், குண்டூசி
மெழுகு தடவிய தீக்குச்சியின் முனையில் ஒரு குண்டூசியை நுழைத்து ஒரு சுற்று சுற்றினால் மெழுகு சுற்றிய காகிதம் பிரிந்து வரும். அதை விரல்களால் பூப் போல பிரித்தெடுங்கள். இதேபோல் குறைந்தது 30 தீக்குச்சிகளில் பூப்போல உருவாக்குங்கள்.
வட்ட வடிவ தெர்மோகோலின் மேல் பூப் போல விரித்த தீக்குச்சிகளை சூரியகாந்தி பூ போல முதல் வட்ட வரிசையில் பசையால் ஒட்டுங்கள். முதல் வரிசைக்குள் செறிகினாற்போல் அடுத்த வரிசையில் தீக்குச்சி பூக்களை ஒட்டுங்கள். அதற்கு மேல் இன்னொரு வரிசையை ஒட்டுங்கள். முழுவதும் ஒட்டி முடித்ததும் அழகான பூ கிடைக்கும், இதோ படத்தில் காட்டியதுபோல்! பசை ஒட்ட சிறிது நேரம் பிடிக்கும். 2 மணி நேர இடைவெளியாவது விடுங்கள்.
பசை நன்றாக உலர்ந்ததும் பூவின் நடுவே விட்டிருக்கும் இடைவெளியில் சிறிய மெழுகுவர்த்தியை ஒட்டுங்கள். இப்போது மிதக்கும் மெழுகுவர்த்தி ஒளிவிட தயார்!
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் இந்த இந்த மிதக்கும் மெழுகுவர்த்தியை ஏற்றி ஒளிவிட செய்யலாம்.
முக்கிய குறிப்பு: தீக்குச்சிகள் எரியும் வாய்ப்பு ஏற்படாமல் இருக்க தீக்குச்சிகளின் மேல் நீர் சொட்டுகளை விட்டு தீ மருந்தை நமுத்துப் போகச் செய்யலாம். குழந்தைகள் உள்ள வீடுகளில் கவனமாக இருக்கவும். பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றாலும் கவனமாக செயல்படவும்.