குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளின் கற்பனை நண்பன்!

செல்வ களஞ்சியமே – 73

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

கற்பனைத் திறன் என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள பெரிய வரம். தங்கள் கற்பனையால் பல பாத்திரங்களை உருவாக்கி பல அற்புதக் கதைகளைப் படைத்தவர்கள் ஏராளம். பெரியவர்களுக்கு மட்டுமில்லாமல், குழதைகளுக்கும் இந்தக் கற்பனைத் திறன் இருக்கிறது.

குழந்தைகள் தனியாக விளையாடும் போது கவனித்திருப்பீர்கள் – தங்களை பெரியவனாகக் கற்பனை செய்துகொண்டு எதிரில் இருப்பவர்களை மிரட்டும். கையில் ஒரு கோல் வைத்துக்கொண்டு அடிக்கும். பிறகு சமாதனப்படுத்தும். பள்ளிக்குச் செல்லும் வயது வந்துவிட்டால் குழந்தை ஆசிரியர் ஆகிவிடும். சுவற்றில் எழுதி நமக்குச் சொல்லித்தரும். ‘வீட்டுப்பாடங்களை ஒழுங்காக எழுதிக்கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் அடிதான்…..!’ என்று நமக்கு எச்சரிக்கை விடுக்கும். நிறைய குழந்தைகள் தாங்களாகவே பேசிக்கொண்டு, பாட்டுப்பாடி, நடனம் ஆடி தங்களது தனியான உலகத்தை கற்பனை செய்துகொள்ளுவார்கள்.

எனது பக்கத்துவீட்டில் ஒரு பெண். தனது குழந்தைக்கு சாதம் ஊட்டும்போது ‘ஸ்ரீகாந்த் என்ன பண்ணினான் தெரியுமா?’ என்று எப்பவும் ஸ்ரீகாந்த் பற்றி பேசிக்கொண்டிருப்பாள். நான் பலதடவை இதை கவனித்துவிட்டு அவளிடம் ஒரு நாள் கேட்டேன்: ‘யாரிந்த ஸ்ரீகாந்த்?’ ‘யாருக்குத் தெரியும், ஆண்ட்டி? இவனுக்கு ஏதாவது பேசிக்கொண்டே சாதம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் சாப்பிடமாட்டான். இவனது கவனத்தை திசை திருப்ப ‘ஸ்ரீகாந்த்’ என்று ஒரு கற்பனை கதாபாத்திரத்தை நானாகவே உருவாக்கிக் கொண்டேன்’ என்றாள் சிரித்தபடியே. அம்மா இப்படிப் பேசுவதைக் கேட்டுக் குழந்தையும் இதுபோல கற்பனை நண்பனை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

எல்லா குழந்தைகளும் தங்களை இன்னொருவராக (அம்மாவாகவோ, அப்பாவாகவோ, ஆசிரியராகவோ) கற்பனை பண்ணிக்கொள்வது ஒரு வகை. தனக்குக் கற்பனை நண்பன் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவனுடன் பேசுவது சிரிப்பது இன்னொருவகை.

‘ஷீலோ, சிறுவயதில் யாருமில்லாத தனிமையில்
உன்னைக் கூப்பிடுவேன் – எப்போதும் ஷீலோ நீ வருவாய்!’

என்று பிரபல பாப் பாடகர் நீல் டயமன்ட் பாடுவார். சிறுவயதில் தனது தனிமையைப் போக்க இவர் தனது கற்பனையில் உருவாக்கிய தோழன் இந்த ஷீலோ. புதிய ஆராய்ச்சிகள் சுமார் 65% குழந்தைகள் இந்த மாதிரியான கற்பனை தோழர்களை உருவாக்கிக் கொள்ளுகிறார்கள் என்று கூறுகின்றன. தங்களது தனிமையைப் போக்கிக் கொள்ளவும், மனநிலை சரியில்லாதபோது தங்களுக்கு துணையாக இந்தத் தோழன் இருப்பதாகவும் பல குழந்தைகள் கூறுகின்றனர். அம்மா கோபித்துக்கொண்டால் இந்த நண்பன் வந்து ஆறுதல் சொல்வான்; அழுதால் சமாதனப்படுத்த, சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள என்று இந்தக் கற்பனைத் தோழன் குழந்தைகளின் கூடவே இருப்பான். குழந்தையால் செய்ய முடியாததை இந்த தோழன் செய்வான். குழந்தைக்கென அவனுக்கே அவனுக்கென்று இந்தத் தோழன் இருப்பான். குழந்தையை கோபிக்காதவனாக, குறை கண்டுபிடிக்காதவனாகவும் இருப்பான்.

இந்தத் தோழன் எந்த உருவிலும் எந்த அளவிலும் இருக்கலாம். அவர்கள் குழந்தைகள் படிக்கும் கதைப் புத்தகங்களில் வரும் நாயகன் அல்லது நாயகி ஆகவோ, அல்லது அவர்கள் விளையாடும் மனித உருவில் இருக்கும் பொம்மையாகவோ இருக்கலாம். இந்தக் கற்பனைத் தோழன் எப்போதும் குழந்தையுடனே இருப்பவனாகவோ, அல்லது அவ்வப்போது வந்து போகிறவனாகவோ இருக்கலாம். காரணமில்லாமல் திடீரென தோன்றுவார்கள்; திடீரென மறைந்து விடுவார்கள். இரண்டரை வயதுக் குழந்தைக்குக்கூட இந்த வகையான தோழன்/தோழி இருக்கக்கூடும். குழந்தையின் மூன்று வயது வரை இந்த தோழர்கள் அவர்களுடன் இருக்கக்கூடும். இந்தத் தோழன் உண்மையல்ல; கற்பனை என்பது குழந்தைக்கு தெரியும். மூன்று வயதுக் குழந்தைக்கு எது உண்மை, எது கற்பனை என்று நன்றாகத் தெரியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஒருகாலத்தில் இந்த மாதிரியான கற்பனை குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதாக நினைத்திருந்த ஆராய்ச்சியாளர்கள் பல புதிய ஆராய்ச்சிகளின் மூலம் இவை குழந்தைகளின் ஆரோக்கியமான செய்கையே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். சிறுவயதுக் கற்பனை பிற்காலத்தில் குழந்தையின் மொழி வளர்ச்சிக்கும், மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவுகிறது என்கிறார்கள். இப்படிக் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளுவதன் வழியே மற்றவர்களுடன் உரையாடவும், மாறுதலான கருத்துக்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளவும் கற்றுக்கொள்ளுகிறார்கள். தங்கள் கருத்துக்கு எதிரான கருத்துக்களையும் சரியான முறையில் ஏற்றுக் கொள்ள இந்த கற்பனைப் பாத்திரம் உதவுகிறது.

 

பெற்றோர்கள் இந்த விஷயத்தை எப்படிக் கையாளுவது?
உங்கள் குழந்தை உங்களிடம் வந்து தனது கற்பனைத் தோழனுக்கு சாப்பிட ஏதாவது செய்து கொடு, அல்லது படுத்துக்கொள்ள படுக்கை வேண்டும் என்றால் குழந்தையை கோபித்துக் கொள்ளாதீர்கள். குழந்தை சாப்பிடும்போது அதன் பக்கத்தில் கற்பனைத் தோழனுக்கு ஒரு இடம் ஒதுக்குங்கள்; குழந்தையையே படுக்கை தயார் செய்யச் சொல்லுங்கள். குழந்தையை குறை சொல்லாமல் அவனிடம் சில நல்ல பழக்கங்களை உருவாக்க இந்த வாய்ப்பினைப் பயன்படுத்துங்கள்.
சிலசமயம் உங்கள் குழந்தை பேசக்கூடாத சொற்களையோ, செய்யக்கூடாததையோ செய்துவிட்டு ‘என் தோழன் தான் இப்படிச் செய்யச் சொன்னான்’ என்று சொல்லக் கூடும். அப்போது நீங்கள் ‘அவன் அப்படிச் செய்யமாட்டான்; அவன் ரொம்ப நல்ல பையன்’ என்று கண்டிப்பாகச் சொல்லுங்கள். சாப்பிடும்போது கீழே உணவுப் பொருளை இறைத்துவிட்டு ‘அவன் தான் பண்ணினான்’ என்று உங்கள் குழந்தை சொன்னால், ‘சரி, இப்போ நீயும் அவனுமாக இந்த இடத்தை சுத்தம் செய்யணும்’ என்று குரலில் உறுதியுடன் சொல்லுங்கள்.

பள்ளிக்குச் செல்லுவதற்கு முன் குழந்தைகள் இந்த மாதிரியான கற்பனைப் பாத்திரங்களுடன் நட்புக் கொள்ளுகிறார்கள் என்ற எண்ணமும் இப்போது ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது. இந்தக் கற்பனைத் தோழன் இக்குழந்தைகளின் சிறுவயதில் மட்டுமில்லாமல் இவர்கள் வளர்ந்த பின்னும் மற்றவர்களுடன் சுலபமாக உரையாடவும், பிறர் சொல்வதை எளிதில் புரிந்துகொள்ளவும் செய்கிறார்கள். மிகவும் கற்பனைத் திறன் கொண்டவர்களாகவும், சாதனை புரிபவர்களாகவும் இவர்கள் உருவாகிறார்கள்.

இந்தக் கற்பனைப் பாத்திரங்கள் எந்தவகையில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள் என்பதைப் பற்றி இன்னும் இந்த ஆராய்ச்சிகள் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.  இது போன்ற கற்பனைகளை ஊக்குவிப்பது சரியா என்றும் தெரியவில்லை. சில குழந்தைகள் தங்கள் தவறுகளுக்கு இந்தக் கற்பனை கதாபாத்திரங்களின் மேல் பழிபோடுவது பெற்றோர்களுக்கு ஒரு தலைவலியாக இருந்தாலும், ‘இதை முற்றிலும் தவறு என்று ஒதுக்காமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கற்பனைத் திறனை பாராட்டலாம்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

“குழந்தைகளின் கற்பனை நண்பன்!” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. செல்வக் களஞ்சியமே மறுபடியும் மலர ஆரம்பித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி ரஞ்சனி நிஜம் தான் பள்ளி செல்ல ஆரம்பித்த உடனேயே குழந்தைகள் வீடு வந்து தன்னை ஆசிரியையாகத் தொடங்குவதுதான் ஏறக்குறைய அனைத்து குட்டீஸின் முதல் கற்பனை பாத்திரமாக இருக்கும். பாஸிட்டிவான கற்பனைத் திறனை வளர்க்க பெற்றோர்களும் குழந்தைகளுக்கு உதவ முன் வர வேண்டும் அருமையாக ப்கிர்வு பாராட்டுக்கள்

  2. செல்வக் களஞ்சியமே மறுபடியும் மலர ஆரம்பித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி ரஞ்சனி நிஜம் தான் பள்ளி செல்ல ஆரம்பித்த உடனேயே குழந்தைகள் வீடு வந்து தன்னை ஆசிரியையாகத் தொடங்குவதுதான் ஏறக்குறைய அனைத்து குட்டீஸின் முதல் கற்பனை பாத்திரமாக இருக்கும். பாஸிட்டிவான கற்பனைத் திறனை வளர்க்க பெற்றோர்களும் குழந்தைகளுக்கு உதவ முன் வர வேண்டும் அருமையாக ப்கிர்வு பாராட்டுக்கள்

  3. செல்வக்களஞ்சியமே மறுபடியும் மலர ஆரம்பித்து விட்டது பற்றி மிக்க மகிழ்ச்சி ரஞ்சனி பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தவுடன் வீட்டுக்கு வந்ததும் தன்னை ஆசிரியையாக கற்பனை செய்து கொண்டு வீட்டிலுள்ள மேசை நாற்காலிகளை மாணவரகளாக கற்பனை செய்வது தான் அனேகமாக முதல் கற்பனையாக இருக்கும். பாஸிட்டான கற்பனைகளை அவர்களுக்குள் வளர்க்க பெற்றோரும் முன் வரவேண்டும்

  4. அருமையான பதிவு.
    நாங்கள் குழந்தைகளுக்கு கதை சொன்னோம், இப்போது பேரன் கற்பனையாக அழகாய் எங்களுக்கு கதை சொல்கிறான், அவன் விளையாடும் பொம்மைகள் காதாபாத்திரங்கள் அதை வைத்துக் கொண்டு பப்பட் ஷோ காட்டுவான். க்ற்பனையில் டீச்சராக, படிக்கும் குழந்தையாக, டாக்டராக, பாட்டியாக , அம்மா, அப்பாவாக நொடிக்கு நொடி காதாபாத்திரங்கள் மாறும்.
    குழந்தைகளின் கற்பனை திறனை பாராட்டுவோம்.
    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.