இலங்கையில், தலைநகர் கொழும்புக்கும் வடக்கு நகரான யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவையை 24 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக தொடங்கிவைத்துள்ளார்.உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 24 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை, யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ரயில் பாதை புனரமைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதிய ரயிலின் முதலாவது பயணியாகப் பயணித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை யாழ்ப்பாணத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் வரவேற்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வடக்கு வருகையை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளனர். வடக்கு மாகாணத்திலுள்ள கிராமங்களிலிருந்து தென்னிலங்கைக்குத் தொழில்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக வரும் பயணிகள் பல தசாப்தங்களாக யாழ்தேவி ரயில் சேவையைப் பிரதானமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.