2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட சிலரை சேர்க்க, சிபிஐக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான கனிமொழி, சிபிஐ மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார். அதில், “இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மீது குற்றம்சாட்டப்பட்டோர் வாதமும், சிபிஐ தரப்பு வாதமும் முடிந்துள்ளன. 2011-இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் திடீரென்று சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை தங்களது தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோருவது உள்நோக்குத்துடன் கூடிய செயலாகக் கருதப்படுகிறது. சாட்சியங்களிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் முடிந்து விட்ட நிலையில், சிபிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கனிமொழி கோரியுள்ளார். கனிமொழியை போலவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டிவியின் முன்னாள் இயக்குநர் சரத் குமாரும் சிபிஐ மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார்.