கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி டெல்லி நட்சத்திர விடுதியில், சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சடலமாகக் கிடந்தார். அவரது மரணம் குறித்து ஆய்வு நடத்திய 3 மருத்துவர்கள் அடங்கிய குழு, தனது மருத்துவ அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. அதில், சுனந்தாவின் மரணத்திற்கு விஷமே காரணம் எனத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சுனந்தாவின் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான அசோக் குமார் என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என்பதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அறிந்திருந்தனர் என்றார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில், அவரைத் தனியே ஹோட்டல் அறையில் விட்டு விட்டு, சசி தரூர் மட்டும் கூட்டத்திற்குச் சென்றது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அசோக் குமார், ஹோட்டல் அறைக்கு யார் வந்து செல்கின்றனர் என்பதைக் கண்காணிக்கும் கேமராக்களும் செயல்படாதது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்து விட்டது என்றார்.