90களின் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் கவுதமி. 1998ல் திருமணம், அடுத்த ஆண்டு மணமுறிவு, கையில் குழந்தையுடன் தனி ஆளாக வாழ்க்கையை எதிர்கொண்டவர். தன் வாழ்க்கையில் நட்பு பாராட்டிய கமலுடன் 2005 முதல் சேர்ந்து வசிக்கிறார். இவருடைய மகள் சுப்புலட்சுமி தற்போது கல்லூரி மாணவி. நடுவே மார்பகப் புற்றுநோயுடன் போராடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தற்போது மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபிராமி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் கவுதமி, சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். அதுவும் 19 வருடங்கள் கழித்து!
கமலுடன் பாபநாசம் படத்தில் அவருக்கு இணையாக நடிக்கிறார் கவுதமி. இந்தப் படம் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் தழுவல். மீண்டும் நடிக்க வந்தது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் கவுதமி, தன் மகள் சுப்புலட்சுமிதான் தன்னை சினிமாவில் மீண்டும் நடிக்க வைக்க காரணம் என்று சொல்கிறார்.