சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு தடை கோரியும், ஜாமின் அளிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா ஒரு பெண் என்றும், அவரது வயதையும் அவரது உடல் நலனையும் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையின் போது ஜெயலலிதா முதல்வராக இருந்தக் காலப்பகுதியில் , வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த பதவியை துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அந்த மனுவில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமின் அளித்தால் அவர் எந்த விதத்திலும் சட்டத்தை மீறி செயல்படமாட்டார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.