ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு கர்நாடக சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டுமென்று முன்னாள் பிரதமர் தேவகவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் இருந்துதமிழக சிறைக்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை.மாறாக, இந்தவிவகாரத்தில் உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கவேண்டும். ஜெயலலிதாவை விடுதலை செய்ய தவறினால் தமிழகத்தில் வாழும் கன்னடர்களை சிறைபிடிப்போம் என்று தமிழகத்தை சேர்ந்த சிலரின் கருத்து சரியானதல்ல.
இந்தியாவில் கூட்டாட்சி கட்டமைப்பில் வாழ்ந்துவருகிறோம். எனவே, கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள், தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமையாகும். யாரோ ஒருவர் கூறியதற்காக, அவர்கள் நினைப்பதை போல அப்படி செய்துவிட இயலாது.ஜெயலலிதா குற்றம்சாட்டப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்தில் நடப்பதால், கர்நாடகம்-தமிழகத்திற்கு இடையிலான நல்லுறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்த வழக்கிற்கும் கர்நாடகத்திற்கும், மாநில அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருவில் நடந்துவருகிறது என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும்.