சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா கடந்த மாதம் 29- ம் தேதி ஜாமின் மனு தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயலலிதா தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, தண்டனை நிறுத்தி வைக்க வலியுறுத்தவில்லை என்றும் ஜாமின் வழங்கினால் மட்டும் போதும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக செய்தி சானல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பவானி சிங் தெரிவித்தார். மேலும் அந்தப் பேட்டியில் ஜாமின் வழங்க நீதிபதி விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் ஜெத்மலானி வாதாடியதாகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிகொள்ள ராம் ஜெத்மலானியின் வாதமே காரணம் என்றும் பாவானி சிங் தெரிவித்தார்.