செல்வ களஞ்சியமே – 72
ரஞ்சனி நாராயணன்

(வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற செல்வக் களஞ்சியம் தொடர் வெளியாவதில் சற்றே எதிர்பாராதவிதமாக இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதற்காக வாசகர்களிடம் மன்னிப்பை கோருகிறோம். இனி புதன்கிழமை தோறும் செல்வக் களஞ்சியம் வெளியாகும்.
– ஆசிரியர் குழு)
தினமும் சண்டைதான். எல்லாவற்றிலும் போட்டிதான். ‘அவள்/அவன் மட்டும் ஒசத்தியா? நான் தான் எப்பவும் விட்டுக் கொடுக்கணுமா? அவளை/அவனை ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, என்ன மட்டும் எப்பவும் திட்டுவீங்க’ – இதெல்லாம் எங்கேயோ கேட்ட வசனங்களாக இருக்கிறதா? இரண்டு குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் குழந்தைகள் சின்னவர்களாக இருக்கும்போது கேட்டதுதான்.
இரண்டு வயது வித்தியாசம் ஆனாலும் சரி, ஐந்து ஆறு வயது வித்தியாசம் ஆனாலும் சரி இந்த சண்டை நிச்சயம் நடக்கும். எத்தனை சண்டை போட்டாலும் இந்த கூடப்பிறந்தவர்களுக்குள் இருக்கும் உறவு தனிவகை; நமக்குத் தெரிந்தோ தெரியாமலே நம் கூடப்பிறந்தவர்களின் குணநலன்கள் நம்மை உருவாக்குகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வருடாவருடம் ரக்ஷாபந்தன் என்கிற பண்டிகை அண்ணா, தம்பிகளுக்காகவே – அவர்கள் மேல் அக்கா, தங்கைகள் வைத்திருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் காட்ட – கொண்டாடப்படுகிறது. நம்மூரிலும் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து வரும் கனுப்பண்டிகை கூடப்பிறந்தவர்களுக்காகவே அல்லவா? காக்கா பிடி வைச்சேன்; கனுபிடி வைச்சேன்; காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்’ என்று சொல்லிக்கொண்டு உருவத்திலும் சில கூடப்பிறந்தவர்கள் ஒன்றே போல இருப்பார்கள். பார்த்தாலே வண்ண வண்ண சாதங்கள் செய்து பிடி வைப்பது சகோதரர்களுக்காகவே. அப்படி பிடி வைக்கும் அக்கா தங்கைகளுக்கு அண்ணா தம்பிகள் சீர் கொடுப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. சில சகோதர சகோதரிகளுக்குள் நிறைய உருவ ஒற்றுமையும் இருக்கும். பார்த்தவுடனே சொல்லிவிடலாம். ‘ஓ! நீ அவனோட/அவளோட தம்பியா? தங்கையா?’ என்று கேட்கும் அளவிற்கு உருவ ஒற்றுமை சில சகோதர சகோதரிகளுக்குள் இருக்கும். குரல், பேச்சு, நடை, முக பாவங்களிலும் ஒற்றுமை இருக்கும்.
பெற்றோர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது கூடப்பிறந்தவர்களுக்குள் வரும் சண்டை! சில ஆராய்ச்சி முடிவுகளின்படி கூடப்பிறந்தவர்கள் ஒரு மணி நேரத்தில் எட்டு முறை சண்டை செய்கிறார்களாம் (யப்பாடி!) பெற்றோர்களுக்கு இவர்களை சமாதனப்படுத்துவது பெரிய பாடாக இருந்தாலும் இந்த மாதிரியான சண்டைகள் பல படிப்பினைகளை இவர்களுக்குக் கற்பிக்கின்றனவாம். இதனால் பிற்காலத்தில் அலுவலகங்களில் சில முரண்பாடான பேச்சு வார்த்தைகளின் போது அவற்றை சரியான முறையில் கையாள முடிகிறதாம்.
அண்ணாவுடன், அல்லது அக்காவுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளுவது பெரியவர்கள் ஆனபின்னும் தொடர்கிறது. திருமணமாகி வேறு வேறு வழியில் சென்ற பிறகும் கூட இந்தப் பொறாமை தொடருகிறது. இவையே நமது பிற்கால வெற்றி தோல்விகளையும் தீர்மானிக்கின்றது என்கிறார்கள் ஆய்வாளர்கள். தங்கைகளுக்குத் திருமணம் செய்தபின் தான் திருமணம் செய்துகொள்ளும் எத்தனையோ அண்ணன்மார்களைப் பற்றியும், அக்காமார்களைப் பற்றியும் நாம் திரைப்படத்தில் மட்டுமல்ல; நிஜ வாழ்க்கையிலும் பார்க்கிறோம், இல்லையா?
ஒரு விஷயம் நாம் எல்லோருமே கவனித்திருப்போம் – அதாவது இரண்டாவது குழந்தை முதல் குழந்தையைவிட சூட்டிகையாக இருக்கும். அம்மா தனது அக்கா/அண்ணாவை திட்டும்போதே அதிலிருந்து பாடத்தை தான் கற்றுக்கொண்டு அம்மாவிடம் நல்ல பேர் எடுக்கும் சில குழந்தைகள். அதுமட்டுமல்ல; அக்கா மட்டும் தான் நன்றாகப் படிப்பாளா? பாடுவாளா? நானும் எல்லாம் பண்ணுவேன் என்று போட்டிபோட்டுக்கொண்டு படிக்கும், பாடும் குழந்தைகளும் உண்டு. அம்மா அப்பாவிடமிருந்து மட்டுமல்லாமல் கூடப் பிறந்த சகோதர சகோதரிகளிடமிருந்தும் கற்கும் அடுத்த குழந்தை சூட்டிகையாக இருப்பதில் வியப்பு ஏதுமில்லை.
இங்கு ஒரு மிக முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். இரண்டு குழந்தைகள் இருப்பது பலவிதங்களில் சௌகரியம். இரண்டு பேரும் சேர்ந்து விளையாடலாம். வெளியில் போய் விளையாட நண்பர்கள் தேட வேண்டிய அவசியமில்லை. அதே போல சாதம் ஊட்டும்போதும் இரண்டு பேருக்கும் ஒன்றாக ஊட்டிவிடலாம். நேரம் மிச்சமாகும். அதே சமயத்தில் பெற்றோர்கள் கவனமாகவும் இருக்கவேண்டிய நேரங்களும் உண்டு. இரண்டுபேரும் விளையாடிக்கொண்டிருகிறார்கள் என்று தனியாக விடவேண்டாம். பெரிய குழந்தை என்றாலுமே அதுவும் குழந்தைதான். குழந்தைத்தனம் முழுக்கவும் போயிருக்காது. அதனால் நிச்சயம் பெற்றோர்களின் கண்காணிப்பு மிகவும் அவசியம்.
எங்கள் வீட்டில் நடந்த ஒரு சம்பவம்: அண்ணா (4வயது) குளிக்கும்போது தங்கச்சி பாப்பா தவழ்ந்து தவழ்ந்து குளியலறைக்குள் போய்விட்டாள். அண்ணாவிற்கு ஏக குஷி! தானும் ஒரு சொம்பு நீர் ஊற்றிக் கொண்டு பக்கத்தில் வந்த தங்கச்சி பாப்பாவிற்கும் தலையில் கொட்ட….’வீல்’ என்ற தங்கச்சி பாப்பாவின் குரல் அம்மாவை ஓடிவர வைத்தது. இன்னொரு சமயம், தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பளத்தை தங்கச்சிக்கும் ஊட்டிவிட்ட அண்ணாவை அம்மா கோபித்துக் கொண்டாள். நல்ல காலம் உடனே பார்த்து சின்னக்குழந்தையின் வாயிலிருந்த அப்பளத் துண்டுகளை எடுத்துவிட்டாள் அம்மா. அண்ணாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. தங்கச்சிப் பாப்பாவிற்கு தான் குளிப்பாட்டினால் என்ன தப்பு? அப்பளம் எவ்வளவு நன்றாக இருக்கு; அதை தங்கச்சி பாப்பாவுடன் ‘ஷேர்’ பண்ணிக்கொண்டால் அம்மா ஏன் கோபித்துக் கொள்ளுகிறாள் என்று!
பெரியவர்கள் ஆனவுடன் அண்ணாவும் தங்கையும் நல்ல நண்பர்கள் ஆவார்கள். அதேபோல அக்காவும் தம்பியும் ஒத்துப்போவார்கள். ஆனால் அண்ணாவோ அக்காவோ நிச்சயம் தனக்குப் பிறகு பிறந்தவர்களை கொஞ்சம் ‘மிரட்டு’வார்கள். அண்ணா/ அக்கா என்ற அதிகாரத்தை காட்டுவார்கள். என் பிள்ளை சிறுவயதில் அடிக்கடி ஒரு வாக்கியத்தை திரும்பத் திரும்பச் சொல்லுவான்: ‘இவ ஏன்தான் எனக்கு அக்காவா பொறந்தாளோ? தங்கையா பொறந்திருந்தா எத்தனை நன்னா இருந்திருக்கும்? நான் அவள நன்னா விரட்டியிருப்பேன்!’
இதைபோல சகோதர சகோதரி இல்லாத குழந்தைகள் தங்களுக்குள் ஒரு கற்பனை நண்பனை உருவாக்கிக் கொள்ளுகிறார்களாம். இது மிகவும் ஆரோக்கியமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அடுத்த வாரம் இதுபற்றிப் பேசுவோம்!