கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சகவீரர்கள் சேலத்தைச் சேர்ந்த கணேசன், விருதுநகரைச் சேர்ந்த சுப்புராஜ், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் சிங் ஆகியோர் பலத்த குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் கோவர்தன்சிங், பிரதாப்சிங் ஆகியோர் பலத்த காயத்துடன் கல்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய வீரர் விஜய் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது. அணு மின் நிலையம், அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள், அதிகாரிகளின் குடியிருப்பு பாதுகாப்புக்காக சுமார் 500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 8 மணி நேரச்சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அணு மின் நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவுனரிடையே நேற்று நள்ளிரவு தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் நேரச்சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு படையினர் பிரித்து விடப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் படையினர் அவர்களுக்குள் ஒருவருக்கொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக போலிஸார் தெரிவித்தனர்.