கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் அரசு மதுபானக் கடைகளை (டாஸ்மாக்) ஞாயிற்றுக்கிழமைகளில் மூட வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, இந்த இயக்கத்தின் பொதுச் செயலர் செந்தில் ஆறுமுகம் கூறியது: மதுக் குடிப்பவர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவால் அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால்தான் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடும்பம், சமுதாய அளவில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ள மதுவை ஒழிக்க, தமிழக அரசு மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். அதன் முதல்கட்டமாக, கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் அரசு மதுபானக் கடைகளை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூட வேண்டும் என்றார் அவர்.