ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, தண்டனையைத் தடை செய்யும் மனுவும், ஜாமின் கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார். முன்னதாக, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து செய்தி வெளியானது. அதற்கு, மதியம் 2.30க்குப் பின்னர் நடைபெற்ற வாதத் தொடர்ச்சியின்போது, அரசுத் தரப்பில் இருந்து ஆஜரான வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் வெளிவிட ஆட்சேபம் ஏதும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதனால், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்துவிடும் என்று செய்தி பரவியது.
மேலும், நீதிபதி தனது உத்தரவை வாசிக்கத் தொடங்கியவுடனே, அதற்கான நம்பிக்கை தெரிந்தது. இதனால், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், தனது உத்தரவின் இறுதியில் நீதிபதி சந்திரசேகரன் இந்த வழக்கில் ஜெயலலிதாவை ஜாமினில் விடுவிப்பதற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என்று கூறினார்.