கேரளத்தில் அடுத்த பத்தாண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில் புதிய கொள்கைகளை உருவாக்கி அதனை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஞாயிறுதோறும் மதுக்கடைகளை மூடும் திட்டம் அமலாகியுள்ளது. இதன்படி, 400 அரசு மதுக்கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்.மேலும், அரசு விடுமுறை நாள்களான காந்தி ஜெயந்தி, ஸ்ரீநாராயண குரு பிறந்த தினம், புனித வெள்ளி ஆகிய நாள்களில் மதுக்கடைகள் ஏற்கெனவே மூடப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் 10 சதவீத மதுபானக் கடைகள் மூடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஹோட்டல்களுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களை மூடுமாறு கேரள அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த வாரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனியார் அமைப்பு ஒன்று மேற்கொண்ட கருத்து கணிப்பில் கேரள ஆண்களும் பெண்களும் அமோக ஆதரவை அளித்துள்ளனர். 98% சதவிகித பெண்களும் 86% சதவிகித ஆண்களும் பூரண மதுவிலக்குக்கு ஆதரவளித்துள்ளனர்.