‘தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் அக்டோபர் 7-ந் தேதியன்று மூடப்படும் என்றும், பள்ளி நிர்வாகிகளும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பள்ளி கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ‘தனியார் பள்ளிகள் அறிவித்துள்ள போராட்டம், மாணவர்கள் நலனோ, ஆசிரியர்கள் நலனோ, கல்வித்துறை கோரிக்கையோ சம்பந்தப்பட்டது அல்ல. பொதுநலனும் சம்பந்தப்பட்டதும் அல்ல. மாறாக நீதிமன்றத்தால் ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக அரசியல் மற்றும் சுயநோக்கங்களுக்காக நடத்தப்படுவதாகும். இது ஜனநாயகத்திற்கும், பொதுநலன் சார்ந்த விழுமியங்களுக்கும் எதிரான செயலாகும். இது மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும்’ என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து வந்த கண்டனங்கள் காரணமாக தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி நாளை பள்ளி தாளாளர்களின் உண்ணாவிரதம் நடைபெறும் என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.