நீதிக்கு தலைவணங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவினரின் முறையற்ற போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்தியோ, ஈழப்பிரச்னைக்காக போர்க்கொடி உயர்த்தியோ, மீனவர்கள் கைது மற்றும் மின்வெட்டு சிக்கலுக்காக குரல் கொடுத்தோ சிறைக்கு செல்லவில்லை. மாறாக, ஊழல் செய்ததற்காகத் தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அதுவும் காலம் கடந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி தமிழகத்தைச் சேர்ந்தவர் கூட அல்ல… வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால், ஜெயலலிதா ஏதோ தவறே செய்யாதவர் போலவும், விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை உள்ள நீதிபதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி செய்து அவரை சிறையில் தள்ளிவிட்டதைப் போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காவிரி பிரச்னைக்காக ஜெயலலிதா போராடியதால், அவரை பழி வாங்குவதற்காகவே கன்னடர் என்ற முறையில் நீதிபதி குன்ஹா கடும் தண்டனை வழங்கியதாக ஆளுங்கட்சியினர் குற்றம்சாற்றுவது மிக அபத்தமானது. இருமாநில உறவை பாதிக்கக்கூடியதும் ஆகும். இத்தகைய போக்குகள் அனுமதிக்கப்பட்டால், அவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எதிர்காலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அளிக்கப்பட்டால், அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையும், நீதிபதியையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடும். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஊடகங்கள் அமைதியை கலைத்து, ஒருசார்பு நிலையை தவிர்த்து சட்டத்தையும், நீதியையும் வளைக்கும் ஆளும் கட்சியினரின் முயற்சியை முறியடித்து, ஜனநாயகத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்கு துணை நிற்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார் ராமதாஸ்.