ஆசிய விளையாட்டு மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 7-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் 51 கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனை ஜாயினாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மேரிகோம் 2 – 0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மேரிகோம் பெற்றிருக்கிறார்.
சாதனை ஒருபக்கம் இருக்க, சர்ச்சையும் இப்போது எழுந்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு நடுவர் வழங்கிய சர்ச்சைக்குரிய தீர்ப்பு குறித்து , இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. விரிவான அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார். அறிக்கை கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சர்களான கிரண் ரிஜ்ஜூ, வி.கே. சிங் ஆகியோரும் சரிதா தேவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். குத்துச்சண்டை போட்டிகளில் நடுவர்களின் முடிவு பல சந்தர்ப்பங்களில் மோசமாகவே இருந்திருக்கிறது என வி.கே.சிங் தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான குத்துச்சண்டை அரையிறுதியில், இந்தியாவின் லைஷ்ராம் சரிதா தேவி, தென்கொரிய வீராங்கனையை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் நடுவர்களின் பாரபட்சமான முடிவால் தோல்வி அடைந்ததாகக் கருதிய சரிதா தேவி, தமக்கான வெண்கலப் பதக்கத்தை தென்கொரிய வீராங்கனைக்கு அணிவிக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு பின் சரிதா மீது சர்வதேச குத்துச்சண்டை சமேளனம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.