செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதல்நாளிலேயே வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தைப் வண்ணப் புகைப்படம் பிடித்து அனுப்பியுள்ளது.இந்தப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை பல கோணங்களில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்களை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனும், இஸ்ரோ நிறுவனத்தின் அறிவியல் ஆலோசகர் வி.கோடீஸ்வர ராவும் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து சமர்ப்பித்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. மங்கள்யான் விண்கலம் 300 நாட்களுக்கு மேல் பயணம் செய்து இலக்கை எட்டி உள்ளது.