தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு தமிழக -கர்நாடக எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வரவுள்ளதால் தமிழக – கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் தமிழகத்திலிருந்து ஏராளமான கட்சித் தொண்டர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை ஆணையர் எம்.என் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.