ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை மதிப்பெண் அளிக்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.கே.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர் பணியில் நியமனம் செய்ய முடியும் என மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தேர்வுக்கான தகுதிகளையும் வரையறை செய்துள்ளது. மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில், ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் விதிமுறைகளைத் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்ஜிடிஇ) வகுத்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு நடத்துகிறது.
கடந்த 2012 வரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரான தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகக் குறைத்து உத்தரவிட்டது. என்சிடிஇ-யின் வழிகாட்டுதல்படி இந்தச் சலுகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர்களுக்கான தகுதிகளை மட்டுமே நிர்ணயிக்க மத்திய அரசு என்சிடிஇ-க்கு அதிகாரம் அளித்தது. ஆனால், அதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்க என்சிடிஇ-க்கு அதிகாரம் இல்லை. எனவே, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, சலுகை வழங்க வகை செய்யும் என்சிடிஇ-யின் வழிகாட்டு விதிகள் மற்றும் அறிவிப்பு, தமிழக அரசு 2014 பிப்.6 ல் வெளியிட்ட அரசாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவு:
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு மனு அளித்ததால் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது.
யார் உரிமை கோரினார்கள் என்பதை அரசு கூறவில்லை. ஏற்கெனவே 2 முறை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அனைத்து தரப்பினரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறிவிட்டு, அதன்பின்பு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும் என்று கூறுவது முரண்பாடாக உள்ளது.
ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் மிக குறைவானவர்களே தேர்ச்சி பெற்ற காரணத்தினால் மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல. தகுதித் தேர்வை போட்டித் தேர்வு போன்று எடுத்துக்கொள்ள முடியாது. இத்தகைய தேர்வில் சலுகை மதிப்பெண் அளிப்பதன் மூலம் கல்வித் தரம் பாதிக்கும்.
இந்த அரசாணை வெளிவந்ததற்கு முந்தைய நாள் (5.2.2014) தகுதித் தேர்வு சலுகை மதிப்பெண் விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற விஷயத்தில் சமரசமும் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அந்த உத்தரவு நகலில் நீதிபதி கையெழுத்திட்ட அந்த மை காய்வதற்குள் சலுகை மதிப்பெண் வழங்கி மறுநாள் (6.2.2014) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் 100-க்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி என ஒரே மாதிரியான நடைமுறை உள்ளது. இதே போன்றுதான் தகுதித் தேர்விலும் அனைத்து தரப்பினருக்கும் ஒரேமாதிரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட வேண்டும். தகுதித் தேர்வில் அனைத்து தரப்பினரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என்பதுதான் சரியாக இருக்கும்.
எனவே, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சலுகை மதிப்பெண் வழங்கி, 6.2.2014 இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இந்த அரசாணை அடிப்படையில் ஏற்கெனவே பணி நியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது. தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களையும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கலாம் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.