கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள ஆயிரத்து 111 பதவிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை 29-ஆம் தேதி தாக்கல் செய்யலாம். வேட்பாளர் பட்டியல் மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். வேட்புமனுக்களை வரும் 30-ஆம் தேதி திரும்பப் பெறலாம். வாக்குப் பதிவு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும். பதிவான வாக்குகளை எண்ணும் பணி, அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெறும். தலைவர், துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 11-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் எம்.ஆர்.மோகன் தெரிவித்தார்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்-மீன்வளத் துறை ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (வீட்டு வசதி), கைத்தறி-துணிநூல் இயக்குநர், தொழில் துறை-தொழில் வணிகத் துறை இயக்குநர், சர்க்கரைத் துறை இயக்குநர், பால்வளத் துறை ஆணையர் ஆகிய செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் 704 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அந்தச் சங்கங்களில் 937 நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியிடங்களும், 168 சங்கங்களில் 108 தலைவர், 66 துணைத் தலைவர் பதவியிடங்களும் காலியாகவுள்ளன. 937 நிர்வாகக் குழு உறுப்பினர் காலிப் பதவிகளில் 344 பதவிகளுக்கு ஆதிதிராவிட பழங்குடியினத்தவரும், 195 பதவிகளுக்குப் பெண்களும், 398 பதவிகளுக்குப் பொதுப் பிரிவினரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.