‘கவுரவக்’ கொலைகளைத் தடுக்க மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு சேலத்தில் கேப்டன் லட்சுமி-சியாமளி குப்தா நினைவரங்கில் நடைபெற்று வருகிறது. என்.அமிர்தம், வாலண்டினா மற்றும் ஆர்.சந்திரா தலைமையில் வெள்ளியன்று துவங்கிய மாநாடு சனிக்கிழமை தொடர்ந்து நடை பெறுகிறது. மாநாட்டை உழைக்கும் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் எம்.மகாலட்சுமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.மணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
சுயவிருப்பத்தின் அடிப்படையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள், குறிப்பாக பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டு குரூரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இதைத் தடுக்க மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
மேலும், சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும். இவர்களுக்கான திருமண உதவித் தொகையை ரூ.2 லட் சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் வறட்சிக்குள்ளான மாவட்டங்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி அனைத்து பயிர்களுக்கும் பொருந்தும் வகையில் காப்பீட்டு திட்டம் செயல்படுத் தப்பட வேண்டும்.
தலித் மக்களுக்கு தனி டீ குவளை, ஆலயத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு, பிணம் எடுத்துச் செல்ல பொது வழி மறுப்பு, கிணற்றில் தண்ணீர் பிடிக்கத் தடை, தீண்டாமை சுவர் போன்ற பல்வேறு தீண்டாமை வடிவங்கள் நீடித்து வருகின் றன. எனவே, தற்போதுள்ள வன் கொடுமைதடுப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தி, தலித் மக்களை தாக்குதல்களி லிருந்து பாதுகாக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 2013 இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ, அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ அல்லது சட்டத்தின் விதிமுறைகளை மீறினாலோ ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வகை செய்கிறது. எனவே, பணியிடங்களிலும், ஸ்தல மட்டத்திலும் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதில் மாதர் சங்க பிரதிநிதிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் இடம்பெறுவதை உறுதி செய்திட வேண்டும்.
சட்ட வரம்பிற்குட்பட்டு அமில விற்பனையை நெறிப்படுத்துவதோடு, அமில வீச்சால் பாதிக்கப்படும் பெண்களுக்கான உயர் மருத்துவ சிகிச்சையும், எதிர்கால பாதுகாப்பிற்கான கல்வி, வேலைவாய்ப்பு நிவாரணம் உள்ளிட்டஅனைத்தையும் மத்திய- மாநில அரசுகள் தங்களது நேரடிப் பொறுப்பில் நிறைவேற்றிட முன்வர வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் குறித்த குறுந்தகட்டை அகில இந்தியத் துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் வெளியிட விருதுநகர் மாவட்டத் தலைவர் சி.ஜோதி லட்சுமி பெற்றுக் கொண்டார். `விடுதலைப் போரில் பெண்கள்’ என்ற பிரசுரத்தை அகில இந்தியத் தலைவர் மாலினி பட்டாச்சார்யா வெளியிட மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.கலைச்செல்வி பெற்றுக் கொண்டார்.