2 ஜி ஊழலுடன் தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு குறித்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம், விதிகளை மீறி அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய ஒப்புதலை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த சிபிஐ வழக்கறிஞர், சுமார் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான மேக்ஸிஸ் – ஏர்செல் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதியளித்தது தவறு என்றும் இந்த வழக்கில் அவரது பங்கு குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். 600 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையே அனுமதியளிக்க முடியும் என்றும் சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், சன் டைரக்ட்டில் மேக்ஸிஸின் துணை நிறுவனம் 600 கோடி ரூபாயை முதலீடு செய்தது தொடர்பாக சிபிஐ-யிடம் விளக்கம் கேட்ட நீதிபதி, சன் டைக்ரக்டில் 82 சதவிகித பங்குகளை கொண்டுள்ள, கலாநிதிமாறனின் மனைவி காவேரிக்கு முதலீட்டில் தொடர்பிருக்கிறதா என வினவினார். இதற்கு பதில் அளித்த சிபிஐ வழக்கறிஞர், நீதிமன்றம் உத்தரவிட்டால் காவேரி கலாநிதிமாறனிடம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.