அரசியல், இந்து மதம், இன்றைய முதன்மை செய்திகள், ஊடகம், சமூகம், பெண், மதம்

பெண்கள் சாதி வெறி பிடித்தவர்களா?

நந்தினி சண்முகசுந்தரம்

crime against women

திருமணம் ஆகி, குழந்தைக்கு தாயாகியும் பத்தாண்டு காலம் காதலித்தவனை மறக்க முடியாமல் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி எறிந்து காதலித்தவனுடன் வாழ முடிவெடுத்தவர் அந்தப் பெண். புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர். பெற்றோருக்கு விஷயம் தெரிந்து அவர்களின் நிர்பந்தத்தின் பேரில் காதலனை விட்டு கணவருடன் மீண்டும் இணைந்தவர். சமூகத்துக்காக கணவருடன் வசித்தாலும் இன்னமும் மனதளவில் அவர் காதலனுடன் வாழ்வதாகவே சொல்கிறார் அந்தப் பெண்.
‘எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் நீங்கள் விரும்பியவருடனேயே வாழக்கூடாது‘ என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..நாங்க வேற ஜாதி…அவர் வேற ஜாதி…நாங்க எப்படி காலம் முழுசும் சேர்ந்து வாழ முடியும்?’
தான் எப்படி வாழ வேண்டும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் முடிவு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இங்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ அந்தப் பெண் சொன்ன காரணத்தைத்தான். சமூகத்துக்கு தெரியாமல் தன் சாதி அல்லாத தான் விரும்பிய ஆணுடன் வாழ முற்பட்டவருக்கு, நாலு பேருக்கு தெரிய வரும் சூழல் வரும்போது தான் பிறந்த சாதி முக்கியமாகப் படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் சாதியை ஆணித்தரமாக கடைப்பிடிப்பவர்களாக கண்டிருக்கிறோம், ஆண்களுக்குத்தான் சாதீய உணர்வு அதிகம் எனவும் பேசுகிறோம். நிதர்சனத்தில் ஆண்களுக்கு இருக்கும் அதே அளவில் பெண்களுக்கும் சாதி உணர்வு,பெருமிதம் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம்தான் மேலே சொன்ன சம்பவம்.
குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆண் சட்டம் போடுபவனாக இருக்க, பெண்கள் அதை செயலாற்றவும் கட்டிக்காப்பாற்றும் காவலராகவும் செயல்படுகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக வாழ்முறையாக கடைப் பிடிக்கப்பட்ட சாதி அமைப்பில் வளர்க்கப்பட்ட பெண்கள் சாதியற்றவற்றவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்பார்ப்பது ஒருவகையில் மூடத்தனம்தான்.  பள்ளிக் காலங்களிலேயே சக தோழிகள் சாதி தொடர்புடைய விஷயங்களில் கவனமாக இருந்துவந்ததை அவதானித்திருக்கிறேன். என்ன சாதி என்பதைப் பொறுத்தே பேச்சும் பழக்கமும் இருக்கும்.
சமையலறையில் இருக்கிறது சாதி
ஒருவர் என்ன உண்கிறார் என்பதை வைத்து அவர் இன்ன சாதி என்று சொல்லிவிட முடியும். இதை  உண்ண வேண்டும், இதை உண்ணக் கூடாது என்று அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்பவர்கள் பெண்களே. உணவின் மூலம் அடுத்த தலைமுறைக்கு சாதியை கடத்துவது எனலாம். வெளியில் மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி உண்ணும் ஒரு இடைநிலை சாதியைச் சார்ந்த ஆண், அதையே வீட்டுக்குள் கொண்டுவந்தால் அந்த வீட்டின் பெண், அவனை செய்யக்கூடாத குற்றம் செய்வதைப் போல வசைபாடுவாள். அதுபோல பார்ப்பன வீடுகளிலும் இன்றைய சூழலில் நிறைய ஆண்கள் அசைவம் உண்கிறார்கள். ஆனால் அது வீட்டின் வாசற்படியைக் கூட ஏற முடியாது. இங்கே பெண்கள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆண்கள் ஏற்றிவைத்த சாதி உணர்வை, கட்டிகாப்பவர்களாக பெண்கள் எப்படி அழுத்தமாக செயல்படுகிறார்கள் என்பதையே பார்க்க வேண்டியிருக்கிறது.
என் சிறு வயதில் லிங்காயத்துக்கள் வாழ்ந்த கிராமத்தில் சில காலம் வசித்தோம். லிங்காயத்துக்களின் சமையலறையை எட்டிப் பார்ப்பதற்குக் கூட இடைநிலை சாதிக்காரர்களுக்கு அனுமதி கிடையாது. தலித்துகள் வாசற்படியைக்கூட நெருங்க முடியாது. இந்த சாதிய சட்ட திட்டங்களை மீறாமல் பார்த்துக் கொண்டது அந்த வீட்டுப் பெண்கள்தான். இன்னமும் இதே நிலைதான். ஒருவேளை லிங்காயத்து பெண்கள் எல்லாம் முடிவெடுத்து இனி எல்லோரையும் வீட்டுக்குள் அனுமதிப்போம் என்றால், லிங்காயத்து ஆண்களால் என்ன செய்துவிட முடியும்? எல்லோரையும் மணவிலக்கம் செய்ய முடியுமா? முடியாது. பிறகு, ஏன் பெண்கள் சாதி கட்டமைப்பை கட்டிக் காப்பாற்றுகிறார்கள்?
ஆண்களைப் போல பொதுவெளியில் இயங்கும் சுதந்திரம் இல்லாததால் மேற்பார்வையாக பார்க்கும்போது பெண்கள் சாதி உணர்வற்றவர்களாகத் தெரிகிறார்கள். தன் சாதியைச் சேராதவர்கள் மீது நேரடியாக ஆண்களைப் போல வன்முறையை ஏவிவிடாதபோதும், சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். உதாரணத்துக்கு இன்னொரு சம்பவத்தைச் சொல்கிறேன். இடைநிலை சாதியைச் சேர்ந்த ஒரு ஆண், உயர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறான். சாதியைக் காரணம் காட்டி அந்தப் பெண்ணின் பெற்றோர் மறுக்கின்றனர். இந்த மறுப்பில் விடாப்பிடியாக இருந்தது அந்தப் பெண்ணின் தாய்தான். எப்படியோ திருமணம் நடந்துவிட்டது. ஆனாலும் அந்தப் பெண்ணின் தாய், தன் மருமகன் குறித்து சாதியைச் சொல்லி எப்போதும் அவதூறு செய்து கொண்டிருப்பார். இதன் உச்சகட்டம், மருமகன் உடல்நிலை பலகீனம் அடைந்து இறக்கும் தருவாய்க்கு சென்ற பிறகும்கூட தன் மகளை கீழ்சாதிக்காரன் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டான் என்று அழுத்தமாக இருந்து செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்திருக்கிறார். தன் மகளின் விருப்பத்திற்குரிய ஆண் இறந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை இருக்கும் அந்த பெண்ணை சாதி வெறிப்பிடித்தவர் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
சாதி உணர்வும் பெண்சிசுக்கொலையும்
இன்னொரு ஊரறிந்த உதாரணம் தருமபுரி இளவரசம் – திவ்யா.  எதிர்ப்பை மீறி தலித்தை திருமணம் செய்து கொண்ட திவ்யாவின் மீது அழுத்தம் கொடுத்து தன் காதல் கணவனிடமிருந்து பிரிய சாதி வெறியர்களுக்கு கருவியாக இருந்தது திவ்யாவின் தாயார். இப்படி குலப்பெருமை அல்லது சாதிப் பெருமைகளை கட்டிக் காப்பதில் பங்கம் வந்துவிடுமோ என்றுதான் சாதி வெறி பிடித்த சமூகங்களில் பெண்சிசுக் கொலை வேகமாக நடக்கிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  மாதம் ஒரு பெண்சிசுக்கொலை சம்பவம் ஊடகங்களில் பதிவாகிறது. இந்தப் பின்னணிகளைப் பார்த்தால் சாதி வெறிப்பிடித்த குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்த இடங்களில் இவை நடப்பது தெரியும்.
அதுபோலவே மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடக்கும் பெண்சிசுக் கொலைகளுக்கும் பின்னணியாக இருப்பது வெறிப்பிடித்த சாதிதான். பெண் பிறந்தால் வரதட்சணை தர வேண்டும், பெண்களுக்கு செலவுகள் அதிகம் என்பதெல்லாம் நகரம் சார்ந்த நடுத்தர குடும்பங்களில் சொல்லப்படும் காரணங்கள். கிராமங்களில் குறிப்பாக சாதி ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் நடக்கும் பெண்சிசுக் கொலைகளுக்கு  காரணம் தங்கள் வீட்டுப் பெண்கள் கீழ்சாதிக்கார ஆண்களுடன் உறவு கொண்டாடி விடுவார்களோ என்கிற பயமே. இங்கே ஆண்களின் வழியாக வந்த கட்டளைகளை செயல்படுத்துவது பெண்களே.
ஆக, சமூக இயக்கங்கள் செயல்பட வேண்டியது பெண்களிடம்தான். அதற்கான வெளி இப்போது அமைந்துள்ளது. பெண்கள் பொதுவெளிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைக்கு ஊடகங்கள் இருக்கின்றன. சாதி ஒழிப்பு பிரச்சாரங்கள் தொடர் செயல்பாடாக செய்யப்படும்போது பெண்களிடையே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். பெண்களிடையே சாதி ஒழிப்பு பிரச்சாரங்கள் போய் சேராததாலேயே நம் சமூகத்தில் சாதி இன்னமும் நிலையாக நின்று வேர் பிடித்திருக்கிறது. நாத்திகனாக இருக்கும் ஒரு ஆணின் வீட்டில் இருக்கும் பெண், சாதியைப் போற்றும் சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கியிருப்பது இருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு ஆகாது. என் மனைவியின் சுதந்திரத்தில் நான் தலையிடமாட்டேன் என்று அந்த ஆண் மார்தட்ட முடியாது. இது ஒரு வெட்கக்கேடான விஷயம். சாதி மறுத்தவன் வீட்டில் அடுத்த தலைமுறைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாதி கடத்தப்படும் அந்த வீட்டுப் பெண் வழியாக.

கட்டுரையாளரின் வலைப்பூ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.