இன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம்

எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இயல்பாக இருக்கவேண்டும்: ஆர். அபிலாஷ் நேர்காணல்

 

நாகர்கோவிலைச் சேர்ந்த ஆர். அபிலாஷ், ஆங்கில இலக்கியம் படித்தவர். நடக்க இயலாத மாற்றுத் திறனாளி பெண்ணைப் பற்றிய இவருடைய நாவலான ‘கால்கள்’ (உயிர்மை பதிப்பக வெளியீடு 2012) யுவபுரஸ்கார் விருதை இவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இன்றிரவு நிலவின் கீழ் என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகமான ஆர். அபிலாஷ்,  கட்டுரை, நாவல் என தன்னுடைய படைப்பு தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். குறிப்பாக பல்வேறு இதழ்களில் விளையாட்டுத் துறை தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். ’புரூஸ்லி சண்டையிடாத சண்டை வீரன்’ என்கிற இவருடைய நூல் உலகப் புகழ்பெற்ற நடிகர் புரூஸ்லியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறது. ‘இன்னும் மிட்சம் உள்ளது உனது நாள்’ என்கிற கவிதைத் தொகுப்பு சமீபத்தில் வெளியான இவருடைய நூல். யுவபுரஸ்கார் விருதை ஒட்டி ஆர். அபிலாஷுடன் இந்த நேர்காணல்…

writer abilash 2

ஆங்கில இலக்கியம் படித்தவர் நீங்கள். ஆங்கிலத்தில் எழுதினால் பெரிய வாசகர் வட்டம் கிடைக்கும் சூழல் உள்ள நிலையில் தமிழில் எழுதக் காரணம்?

ஆர்.அபிலாஷ்: ஹாலிவுட்டில் நடித்தால் கூடத் தான் உலகப்புகழ் கிடைக்கும். ஆனாலும் தமிழ் நடிகர்கள் ஏன் தமிழில் நடிக்கிறார்கள்? அது போலத் தான். இது என் மொழி, என் சமூகம், அவர்களுடன் உரையாடுகிறேன். அது தான் காரணம்.

ஹைக்கூவில் ஆரம்பித்து, புதுக்கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, நாவல் என பல தளங்களில் இயங்குகிறீர்கள். இந்த வடிவங்கள் ஒன்றையொன்று தாக்கம் செலுத்தாபடி எப்படி அவற்றை கையாள்கிறீர்கள்?

ஆர்.அபிலாஷ்: என் கவிதையும் மொழியாக்கமும் என் உரைநடை மற்றும் புனைவு நடைக்கு கூர்மையும் அழகும் சேர்த்துள்ளன. உரைநடையின் பல ரகசியங்கள் கவிஞர்களுக்கு மட்டுமே தெரியும். குறிப்பாய் நேரடியாய் எழுதும் போதும் தேய்வழக்குகளை தவிர்த்து புதிய கோணத்தை தரும் படியாய் சொற்களை மாற்றி அமைப்பது, வாக்கியங்களை திருப்பி போடுவது, உருவகங்கள் பயன்படுத்துவது போன்று. சுஜாதா நல்ல உதாரணம். அவரது உரைநடையின் தனித்துவம் புதுக்கவிதையின் பாணியை அவர் பின்பற்றுவதனால் ஏற்படுகிறது. அது போல் ஜெயமோகனின் உரைநடையில் வருகிற உருவகங்களை சொல்லலாம்.

என் நாவலிலும் நிறைய கவித்துவமான இடங்கள் வருகின்றன. நாவல் எழுதி முடித்ததும் யாராவது ஒரு ஆழமான மனிதரின் வாழ்க்கைக்கதையை எழுத நினைத்தேன். ஏனென்றால் எனக்கு வாழ்க்கைக் கதைகள் படிக்க ரொம்ப பிடிக்கும். அதனால் தான் புரூஸ் லீ பற்றின நூல் எழுதினேன். அது முற்றிலும் வேறு வகை அனுபவமாக இருந்தது.

சென்னை 375வது ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் கேள்வி. நாகர்கோவிலில் பிறந்த உங்களுக்கு சென்னை எப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுக்கிறது?

ஆர்.அபிலாஷ்: சென்னை என்றால் இங்குள்ள மனிதர்கள் தானே. சென்னைவாசிகள் தங்களுக்குள் ஒடுங்கிக் கொள்கிறார்கள். கிராமத்துக்காரர்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவார்கள். உங்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள். சென்னையில் நீங்கள் ஐம்பது வருடங்கள் வாழ்ந்தாலும் உங்களை தினமும் பார்க்கிறவர் நீங்கள் யாரென அறிந்து கொள்ளாமலே இருப்பார். இது தனிமையை பதற்றத்தை உண்டு பண்ணும். சென்னையில் எனக்கு சில நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். நான் நேரம் கிடைத்தால் அவர்களுடன் சென்று மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருப்பேன். அவர்களால் இன்று சென்னை எனக்கு சொந்த ஊரை விட நெருக்கமான இடமாகி விட்டது.

சின்ன வயதில் அப்பா கன்னிமாரா நூலகம் பற்றி கூறும் போது அண்ணா அங்கு தினமும் சென்று மணிகணக்காய் வாசித்துக் கொண்டிருப்பதாய் சிலாகித்து சொல்லுவார். எனக்கு அதனால் சிறுவயதில் கன்னிமாரா பற்றி பெருங்கனவுகள் இருந்தன. இங்கு வந்தால் அதே போல் கன்னிமாராவில் உட்கார்ந்து வாசிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் முதன்முறை கன்னிமாராவிற்கு சென்ற போது ஏமாற்றமாக இருந்தது. அப்போது எனக்கு மிகவும் பிடித்த நூலகமாக பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்தது. பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகம் வந்ததும் பிரிட்டிஷ் கவுன்சில் டீக்கடை போல் தோன்ற தொடங்கியது. அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழகத்தின் மிகப்பெரிய பண்பாட்டு சின்னம். அதை உருவாக்கியதற்கு கலைஞருக்கு நன்றிகள்.

சென்னையில் இருப்பதால் மீடியாவில் அடிக்கடி தோன்ற முடிகிறது. நிறைய புது நண்பர்கள் கிடைக்கிறார்கள். நிறைய கூட்டங்களில் கலந்து கொள்ள முடிகிறது. இதெல்லாம் அனுகூலங்கள். இறுதியாக இங்குள்ள கடற்கரைகளில் என் காதலியோடு சுற்றித் திரிந்த மகிழ்ச்சியான நினைவுகள் உள்ளன. எங்கள் ஊரில் அப்படி ஒரு பெண்ணுடன் எங்கும் வெளியே சென்று விட முடியாது. நூறு கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும். நூறு கண்களும் நமக்கு தெரிந்த கண்களாக இருக்கும். சென்னையில் அந்த கண்காணிப்பு இல்லை.

நீங்கள் வளர்ந்த சூழல் அல்லது குடும்ப பின்புலம் உங்கள் எழுத்தில் எந்த அளவுக்கு தாக்கம் செலுத்துகிறது?

ஆர்.அபிலாஷ்: என் அப்பாவுக்கு திராவிட இயக்கங்கள் மீது பற்று அதிகம். அவர் எனக்கு எட்டு வயது இருக்கும் போது அண்ணாவின் பேச்சுகள் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். அது நினைவுள்ளது. நான் வளர்ந்ததும் அண்ணா போல் ஆக வேண்டும் என சொல்லுவார். அந்த பத்து பன்னிரெண்டு வயது வரை நான் இலக்கியவாதி என்றால் அண்ணா என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது நினைத்தால் கொஞ்சம் வேடிக்கையாக உள்ளது. அப்பாவின் வங்கியில் ஒரு நூலகம் இருந்தது. அங்கிருந்து நிறைய பிரபல நாவல்கள் எடுத்து வருவார். இரவெல்லாம் தூங்காமல் வாசிப்பேன். அப்படித் தான் என் வாசிப்பு பழக்கம் ஆரம்பித்தது.

பிற்பாடு என் எழுத்துக்கு இரண்டு விசயங்கள் தூண்டுகோலாய் இருந்தன. ஒன்று எங்கள் ஊரில் இயங்கிய கலை இலக்கிய பெருமன்றம் எனும் அமைப்பு. அவர்கள் தொடர்ந்து இலக்கிய கூட்டங்கள், சந்திப்புகள் நடத்தினார்கள். எனக்கு தீவிர இலக்கியம் அறிமுகப்படுத்தினார்கள். நிறைய கற்றுத் தந்தார்கள். அடுத்து, ஊரில் அப்போது சுந்தர ராமசாமி, ஜெயமோகன் போன்ற முக்கியமான எழுத்தாளுமைகள் வாழ்ந்தார்கள். ஜெயமோகன் என் பக்கத்து வீட்டில் சில காலம் இருந்தார். அவர்களுடனான உரையாடல்கள் பெரும் உத்வேகம் தந்தன.

kaalkal

கால்கள் நாவல் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதா? அல்லது முழுவதும் கற்பனையில் உருவானதா?

ஆர்.அபிலாஷ்: அந்நாவலில் வருகிற முக்கிய பாத்திரத்துக்கு ஒரு கால் ஊனம். அவள் அப்பா ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தருகிறார். அவளால் அதை ஓட்ட முடியவில்லை. அதில் இரண்டு சக்கரங்கள் கூடுதலாய் இணைத்து தர கேட்கிறாள். ஆனால் அப்பாவுக்கு அதில் உடன்பாடில்லை. பின்னர் அவள் ஓட்ட முடியாமல் விழுந்து சிரமப்பட அவர் கூடுதல் சக்கரங்கள் சேர்ப்பதை ஏற்கிறார். பிறகு அவள் வண்டி ஓட்ட கற்கிறாள். ஓட்டுநர் உரிமம் வாங்குகிறாள். நாவல் அவள் வண்டி வாங்குவதில் துவங்கி உரிமம் வாங்குவதில் முடிகிறது. இந்த ஒற்றைச் சரடு என் அனுபவம். அது போல் நாவலில் வரும் ஊர் மனிதர்கள் எங்கள் ஊரில் உள்ள அசல் மனிதர்கள். பத்நாபபுரத்தில் வாழ்ந்தவர்கள் நாவலைப் படித்தால் அதிலுள்ள பல கதைகள், சம்பவங்கள் யாரை எதை சொல்கின்றன என எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். என்னுடைய பேராசிரியர் ஒருவர் தான் மதுசூதனன் என்ற பெயரில் வருகிறார். அதனால் அவருக்கு நாவலை அனுப்ப ரொம்ப தயக்கமாக இருந்தது. அது போல் நானும் என் காதலியும் ஒரு பக்கத்தில் சிறு பாத்திரங்களாக வருகிறோம். கார்த்திக் எனும் பாத்திரம் என் ஆத்ம நண்பன் ஒருவனை ஒட்டி உருவாக்கினேன். அவன் அப்பாவும் நாவலில் வருவது போல் ஒருநாள் காணாமல் போனார். ஆனால் இந்த விசயங்கள் எல்லாம் மொத்தமாய் நூறு பக்கஙகள் வரும். மிச்ச 450 பக்கங்களும் என் கற்பனை தான். மைய பாத்திரம் ஒரு பெண். அவளையும் என் கற்பனையில் தான் உருவாக்கினேன். ஏனென்றால் நான் பெண் அல்ல. நாவலின் பெரிய சவாலே இப்படி ஒரு தனி உலகை கற்பனையால் கட்டி எழுப்பி 300-400 பக்கங்கள் தக்க வைப்பது. என் நாவலில் இரண்டும் இருக்கிறது: கற்பனையும் உண்மையும்.

ஒரு புனைவை அல்லது வாழ்க்கை வரலாற்றை எழுதும் முன் நீங்கள் எவ்வகையான ஆய்வுகளைச் செய்கிறீர்கள்?

writer abilash
ஆர்.அபிலாஷ்: புனைவுக்கும் வாழ்க்கை வரலாற்றும் சமமான ஆய்வுகள் தேவையுள்ளன. வாழ்க்கை வரலாற்றில் நீங்கள் தரவுகளை நினைவு வைத்திருந்து தொகுத்து எழுத வேண்டும். புனைவில் அவற்றை மறந்து விட்டு பின்னால் கற்பனையாக மாற்றி எழுத வேண்டும். “கால்களில்” என் அனுபவங்கள் கணிசமாய் உதவினாலும் அதில் வருகின்ற சில நுண்ணிய தகவல்களுக்கு ஆய்வு தேவைப்பட்டன.
போன வருடம் ஒரு அறிவியல் புனைவு நாவல் எழுதினேன். அதற்காக நிறைய படிக்க வேண்டி வந்தது. நாவல் இரு நூற்றாண்டுகளுக்கு பின் நடக்கிறது என்பதால் ஒவ்வொரு விசயமாக இடமாக கற்பனை செய்து இன்னொரு பக்கம் ஆய்வு செய்து எழுத வேண்டி வந்தது. எதிர்காலத்தில் வீடு, சாலை, வாகனங்கள், ஆய்வகங்கள், புறநகரங்கள், போலீஸ், ஆட்சியாளர்கள் எப்படி இருப்பார்கள், குழந்தைகள் எப்படி பிறப்பார்கள், மொழி எப்படி இருக்கும் என ஒவ்வொன்றாக செதுக்க நிறைய பிரயத்தனம் தேவைப்பட்டது. ஆனால் இந்நாவலை இருநூறு பக்கங்கள் எழுதி முடிக்காமல் பாதியில் நிறுத்தி விட்டேன். இதற்காக ஒரு வருடம் உழைத்திருப்பேன்.

இப்போது ஒரு நாவல் எழுதி முடித்திருக்கிறேன். “ரசிகன்”. அதற்காக தொண்ணூறுகளின் ஆரம்ப கால அறிவுஜீவிகள், சிறுபத்திரிகை மரபு, இன்றுள்ள ரசிகர் மன்றங்கள் பற்றி நிறைய ஆய்வு செய்தேன். “புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” நூலை எழுதுகையில் ஆறு மாதங்கள் கராத்தே பயின்றேன். நிறைய புத்தகங்கள் படித்தேன். படங்கள், காணொளிகள் கண்டேன். புத்தகத்தை 350 பக்கங்கள் எழுதி முடித்த பின்னும் இன்னொரு நூறு பக்கங்களுக்கு என்னிடம் கூடுதல் தரவுகள் இருந்தன. ஆனால் பிடிவாதமாய் நிறுத்திக் கொண்டேன். இது என் புத்தகங்களுக்கு என்றல்ல – பிரசுரமாகிற, பிரசுரமாகாத, பாதியில் நிறுத்தப்பட்ட – எந்த நல்ல புத்தகத்தின் பின்னாலும் கடுமையான உழைப்பும் தியாகங்களும் உள்ளன.

எழுத்தாளர் ஜெயமோகனுடனான உங்கள் நட்பைப் பற்றி சொல்ல முடியுமா?

ஆர்.அபிலாஷ்: ஜெயமோகனிடம் நான் தற்போது நட்பிலும் இல்லை. என் சிறுவயதில் சுமார் மூன்று வருடங்களேனும் அவரை தினமும் சந்தித்து பேசி இருக்கிறேன். அது என் ஆளுமை வளர்ச்சிக்கு நிச்சயம் உதவியது. அவரைப் பார்த்து எழுத்தாளனாகும் கனவுகள் எனக்குள் தோன்றின. ஆனால் மூன்று வருடங்களுக்கு முன் அவர் என்னுடனான உறவை தேவையில்லாமல், பல விசயங்களை தப்பாய் கற்பனை செய்து துண்டித்துக் கொண்டார். நான் அவரது விமர்சன கட்டுரை ஒன்றை விமர்சித்து எழுதினேன். அதற்காக அவர் என்னை துரோகி என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினார். பிறகு என்னுடன் பேசுவதை தவிர்த்தார். பின்னர் எனக்கு உடல் மிகவும் மோசமாகி மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டேன். அதை அறிந்து அவர் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விசாரித்தார். தன் அக்கறையை வெளிப்படுத்தினார். அதற்கு பின் நான் அவரிடம் பேசினதில்லை. எனக்கு அவர் மீது சில விமர்சனங்கள் உள்ளன. அதை வெளிப்படுத்தவும் ஒரு வாசகனாக எனக்கு உரிமை உண்டு. ஆனால் அதேவேளை அவரது “விஷ்ணுபுரம்”, “பின் தொடரும் நிழலின் குரல்” ஆகியவை நாவல் இலக்கியத்தில் தனி சாதனைகள் என்பதை என்றும் கூறுவேன். அவர் இயங்கி வரும் மொழியில் வேலை செய்வதில் என்றும் பெருமை கொள்வேன். அதேவேளை மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கூறவும் தயங்க மாட்டேன். எங்களிடையே உள்ளது ஒரு love-hate உறவு எனலாம்.

தமிழிலக்கியத்தில் உடல்மொழி என்கிற உங்களுடைய ஆய்வு பற்றி…
ஆர்.அபிலாஷ்: சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் முழுநேர ஆய்வாளனாக இருக்கிறேன். தமிழ் நவீன கவிதைகளில் குறிப்பாய் உடல் எப்படி சித்தரிக்கப்பட்டு உள்ளது என்பதே என் முனைவர் பட்ட ஆய்வு. நம்முடைய சங்க கால கவிதைகளில் புற உலகு சித்தரிப்பு வலுவாக இருக்கும். புற உலகை காட்டுவதன் மூலம் அக உலகம் வெளிப்படுத்தப்படும். ஆனால் பக்தி காலகட்டம் நம் இலக்கிய நோக்கை அகம் நோக்கி திருப்பியது. விளைவாக புற உலகம் வெகுவாக காணாமல் போனது. இதன் தீவிர விளைவுகளை நாம் தமிழ் நவீன கவிதைகளில் முக்கியமாய் காண்கிறோம். அதில் உடல் – மனம் எனும் இருமை தெளிவாக உள்ளது. “நான்” எனும் சொல் மனதை அல்லது சுயத்தை குறிக்கிறது. உடலை விட்டு தப்பி போகும் விழைவு, ஏக்கம், ஒருவித உடல் வெறுப்பு காணப்படுகிறது. ஆனால் ரெண்டாயிரத்துக்கு பிறகு தலித், பெண்ணிய இலக்கியம் தோன்றியதும் இன்று உடல் பிரக்ஞை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இன்றுள்ள கவிஞர்கள் “நான்” என தம் உடலைத் தான் குறிக்கிறார்கள், மனதை அல்ல. அவர்களின் சுயம் அவர்களின் உடல் தான். இது ஒரு முக்கியமான மாற்றம். இந்த பயணத்தை தான் பதிவு பண்ண முயல்கிறேன்

வெளிவரவிருக்கும் ரசிகன் எப்படிப்பட்ட படைப்பு?

ஆர்.அபிலாஷ்: இல்லை. அதன் மைய பாத்திரன் ஒரு தீவிர அரசியல், இலக்கிய பின்புலம் கொண்டவன். அவன் இன்றுள்ள கேளிக்கை கலாச்சாரத்தில் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என நாவல் பேசுகிறது. அந்த சவால்கள் அவனை எப்படி மாற்றுகின்றன என காட்டுகிறது. இடதுசாரிகள் அரசியல் சமூக தளத்தில் சந்திக்கிற கேள்விகளை ஒரு அத்தியாயத்தில் அலசி இருக்கிறேன். நம்முடைய சிறுபத்திரிகை மரபு மெல்ல காணாமல் ஆவதையும் பதிவு பண்ண முயன்றிருக்கிறேன். அந்நாவல் எதைப் பற்றினது என நாவலை வாசிக்கும் ஒரு வாசகனோ விமர்சகனோ சொன்னால் தன் சரியாக இருக்கும்.

உங்கள் நூல்களை பிரசுரிக்க நீங்களாகவே முயற்சிப்பதுண்டா? அல்லது பதிப்பகங்களே அணுகுகின்றனவா? உங்கள் முதல் புத்தக முயற்சி குறித்து சொல்ல முடியுமா?

ஆர்.அபிலாஷ்: என் முதல் புத்தகமாக ஆலன் ஸ்பென்ஸின் “இதயத்தின் பருவங்கள்” எனும் ஜென் கவிதைத் தொகுப்பின் மொழியாக்கத்தை பிரசுரிக்க தான் விரும்பினேன். அதற்காக ஒரு வருடம் முயன்றேன். ஆனால் நடக்க வில்லை. பின்னர் மனுஷ்யபுத்திரன் “உயிரோசை” இணையதளம் ஆரம்பித்த போது அதில் வாராவாரம் அமெரிக்க ஹைக்கூக்களை மொழியாக்கினேன். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்களை தமிழாக்கி இருப்பேன். நான் சற்றும் எதிர்பாராமல் இது நடந்தது. பிறகு நான் அதே இணையதளத்தில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். என் கட்டுரைகள் பரவலாக கவனிக்கப்பட்டன. பிறகு ஹைக்கூ கவிதைகளுடன் சேர்த்து ஆலன் ஸ்பென்ஸின் தொகுப்பு “இன்றிரவு நிலவின் கீழ்” என்ற பெயரில் என் முதல் நூலாக வெளியானது. இது பிரசுரமாவதற்கு நான் எழுதின கணிசமான கட்டுரைகள் பெற்ற கவனிப்பு முக்கிய காரணம். எதற்கு சொல்கிறேன் என்றால் எழுத்தில் நாம் முற்றிலும் எதிர்பாராதது போல் ஏதாவது நடந்து கொண்டிருக்கும். உதாரணமாய் “கால்கள்” நாவலை ஒரு சின்ன பதிப்பாளர் ஒரு நூறு பக்கத்தில் ஒரு கல்லூரி சிலபஸில் பரிந்துரைப்பதற்காக எழுத கேட்டார். ஆனால் அவர் சொன்ன காலத்திற்குள் என்னால் எழுத முடியவில்லை. மாறாக அது பெரிய நாவலாக வளர்ந்து உயிர்மையில் பிரசுரமாகி இன்று யுவ புரஸ்கார் வென்றிருக்கிறது. இப்போது எழுதி உள்ள “ரசிகனும்” கூட ஒரு சிறுகதையாகத் தான் ஆரம்பித்தது.

பிரசுரத்தை பொறுத்த வரையில் இப்போதும் பல சிரமங்களை சந்திக்கிறேன் தான். எனக்கு மிகச்சில வாய்ப்புகளே கிடைத்துள்ளன. குறைந்தது ஐந்து தொகுப்புகள் போடுமளவுக்காவது கட்டுரைகள் வைத்துள்ளேன். ஆனால் இன்னும் வாய்ப்பு அமையவில்லை. இப்படி பிரசுரம் தமிழ் எழுத்தாளனுக்கு வாழ்நாள் முழுக்க போராட்டம் தான்.

ஒரு எழுத்தாளருக்கு அரசியல் பார்வை அவசியமா? அல்லது கலைத்தன்மை இருந்தால் மட்டும் போதுமா?

ஆர்.அபிலாஷ்: அரசியல் பார்வை இயல்பாக வர வேண்டும். அரசியல் மற்றும் சமூக பார்வை உங்கள் வாசிப்பை விரிவானதாக மாற்றும். மக்களுடன் இன்னும் நெருக்கமாய் உணர செய்யும். எழுத்தையும் விரிவடைய செய்யும். மேலும், இச்சமூகத்தில் வாழ்கிற நாம் சமூகத்துக்கு திரும்ப பங்களிக்க நிறைய கடன்பட்டிருக்கிறோம் தானே. இந்த பேட்டியில் நாம் பயன்படுத்துகிற சொற்கள் எல்லாம் பல்வேறு ஆளுமைகளிடம் புழங்கி மெருகேறி இங்கே நம்மிடம் வந்து சேர்ந்தவை தானே. நாம் கற்கிற, அடைகிற பல விசயங்களை ஏதோ கொடுத்து வைத்தது போல் எடுத்துக் கொள்கிறோம். நாம் உண்ணுகிற ஒரு பருக்கை சோற்றில் இருந்து படிக்கிற ஒரு கருத்து வரை அதன் பின்புலத்தில் எத்தனையோ பேரின் கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொண்டிருக்கிறது. அதனால் ஒரு மனிதனுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம் வேண்டும் என நினைக்கிறேன். அது அரசியல் பார்வையாக வெளிப்படலாம் அல்லது செயலாகவும் இருக்கலாம். எனக்கு சும்மா இருக்கிறவர்களை பிடிக்காது. சார்த்தர் சொன்னது போல் செயலே வாழ்க்கை. செயலே இருப்பு.

ஆர். அபிலாஷின் புத்தகங்களை தொலைபேசி மூலம் வாங்க இந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்க…
9940446650 (வேடியப்பன்)
9994680084 (உடுலை.காம்)
044-24993448 (உயிர்மை)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.