டெல்லியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் வெறும் 49 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சியை கலைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி முதல் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில், தனிபெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பின்வாசல் வழியாக டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பார்தி கூறுகையில், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆகையால் நான் ஆச்சர்யப்படவில்லை’ என்று தெரிவித்தார்.