இந்தியாவில் ஜிஹாத் (புனிதப் போர்) நடத்த,”காய்தாத் அல் ஜிஹாத்’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக “அல்-காய்தா’ பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜவாஹிரி பேசிய விடியோ காட்சி, அல்-காய்தா அமைப்பின் ஊடகப் பிரிவான “அஸ் சஸாப் ஃபவுண்டேஷன்’ மூலம் சமூக வலைதளங்களில் புதன்கிழமை நள்ளிரவு முதல் ஒளிபரப்பாகியது.
சுமார் 55 நிமிட விடியோ உரையில், அய்மான் அல் ஜவாஹிரி உருது, அரபி மொழிகள் கலந்து பேசியுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: “ஆப்கனில் உள்ள தலிபான்களின் தலைவர் முல்லா ஒமர் ஆசியுடன் இந்தியாவில் தொடங்கப்படும் பிரிவுக்கு “காய்தாத் அல் ஜிஹாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அல் காய்தாவின் பாகிஸ்தான் ஷரியா குழு தலைவரான ஆசிம் உமர் இந்தியப் பிரிவுக்குத் தலைமை தாங்குவார். உஸ்தாத் உஸாமா மகமூத், இதன் செய்தித் தொடர்பாளராக இருப்பார்.
இஸ்லாமியர்களைப் பிரிக்க செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள எல்லைகளைத் தகர்க்கும் வகையில் இந்தியப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய துணைக் கண்டத்தில் பிரிந்து கிடந்த முஜாஹிதீன்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட அமைப்பு இது. இஸ்லாமிய தேசத்தை கட்டியெழுப்ப ஒஸாமா பின்லேடன் விட்டுச் சென்ற பாதையில் தொடர்ந்து செயல்படவும் இந்த நோக்கத்துக்கு எதிராக செயல்படும் எதிரிகள் மீது ஜிஹாத் தொடுத்து நமது சுதந்திரத்தை நிலைநாட்டவும் இந்த அமைப்பு அவசியமாகிறது. ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், குஜராத், வங்கதேசம், மியான்மர் என இஸ்லாமியர்களைப் பிரிக்க செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள எல்லைகளைத் தகர்த்து, அங்கு வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரான அநீதி, ஒடுக்குமுறைகளை முறியடிப்போம்’ என்று ஜவாஹிரி பேசியுள்ளார்.