பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார். மதியழகன், நா சே ஆர். ராஜேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘திலகர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாந்தம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ சிடியை அமீர் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். டிரைலரை தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த டி.சிவா வெளியிட நடிகர்கள் ஸ்ரீகாந்த், விஜய் சேதுபதி, கிஷோர், ஆதி, ’பூ’ ராமு, நாயகன் துருவா, நடிகைகள் நாயகி மிருதுளா, பாஸ்கர், நமீதா, நீதுசந்திரா, சஞ்சிதா ஷெட்டி, இனியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய அமீர், ‘‘இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்த போது ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம். தலைவர்கள் பெயரை சினிமாவுக்கு வைக்கிறவர்கள் பொறுப்புடன் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். தலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டைமாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறைகளுக்குத் தெரியாது. எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்” என்றார்.
யார் இந்தத் திலகர்? இப்போது சந்து பொந்துகளில் எல்லாம் கோலாகலப்படுகிறதே பிள்ளையார் கொண்டாட்டம் அதை உண்டாக்கிய முன்னோடி. இந்தப் பிள்ளையார் அரசியல் கருவியாகத் திணிக்கப்பட்டது 1893 ஆம் ஆண்டு. மகாராட்டிர மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிராக இதனைப் பயன்படுத்தியவர் பாலகங்காதர திலகர் என்ற அரசியல் வரலாற்றை தெரிந்துகொண்டு அமீர் பேசுவது நல்லது. அதோடு இப்படிப்பட்ட பயங்கரவாதி பற்றி இன்றைய ஸோ கால்டு தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.