தரிசனம்
கௌதம சித்தார்த்தன்
அவன் எனது பிஷப்பை வெட்டி ராஜாவுக்கு செக் வைத்தபோது கதவு தட்டப்பட்டது.
எனது கணவராகத்தானிருக்கும்.
ஆட்டத்தின் சுவாரஸ்யம் சடுதியில் கலைய, நான் அவனைப் பார்த்தேன். அவன் சட்டென எழுந்துபோய் மறைந்து கொண்டான்.
சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தேன். அவர் பதற்றத்துடன் உள்ளே நுழைந்து நாலாபுறமும் கண்களைச் சுழலவிட்டார்.
சமீப காலமாக என் கணவருடைய கண்களின் இடுக்கில் குரூரம் மின்ன ஆரம்பித்திருக்கிறது. நெற்றிச் சுருக்கங்களிலும், முகத்திலும் சந்தேக முட்கள். எரிச்சலுமிழும் கீச்சுக்குரலும், கள்ளத்தனம் பூண்ட கால்களும், சட்டையுரிந்துபோய் அவரது விகாரமுகம்.
காரணம், அவன்.
அவன் எனக்கு அறிமுகமானதே ஒரு அற்புதமான கதை.
நான் கிராமத்துக்காரி. நகரத்து மாப்பிள்ளை என்றதும் எனது கனவுகள் சட்டென வர்ணம் பூச ஆரம்பித்தனவே. நகர வாழ்க்கை பற்றி வர்ணிக்கப்படும் சகல ரூபங்களும் கண் முன்னால் விரிந்தனவே… கிராமத்தின் பச்சை வயல் வெளிகளில் வண்ணத்துப் பூச்சிகளோடு துள்ளித் திரிந்தவளை கற்சுவர்கள் இறுக்கும் கான்கிரீட் வனத்தின் நான்காவது மாடியில் கொண்டு வந்து சிறை வைத்தால் எப்படியிருக்கும்? ‘க்ளுக்’ என்று ஒரு சிரிப்பொலி உதிர்ந்தது. எனது பாட்டியின் சிரிப்பொலி.
அவள் கண்களை மூடியபடி படுத்திருக்கிறாள். நான் அவளுக்கு ராமாயணம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். கால்கள் ஒரேயடியாய் பரபரக்கின்றன. அவளைத் திருட்டுத்தனமாய் பரிசோதித்தபடியே வாசித்துக் கொண்டிருந்தவள், தருணமுணர்ந்து எழுந்து ஓடுகிறேன். “அடிப்பாவி… ஒரு நிமிஷம்கூட நிக்கமாட்டேங்கறியே… கால்ல சக்கரத்தோட வந்து பொறந்திருக்கியேடி… போற எடத்திலே எப்படி இருக்கப் போறியோ…”
ஆகிவிட்டது. பாத சக்கரத்தைக் கட்டிப்போட்டு ஒரு வழியாய் எட்டு மாதங்கள். இந்த எட்டு மாத காலத்தில் தனிமையெனும் சூன்யக் கிழவியின் பிம்பம் ரத்தமும் சதையுமாக என் முகத்தில் படிய ஆரம்பித்திருந்தது. எத்தனை நாளைக்குத்தான் புஸ்தகங்கள் படித்தே பொழுதைக் கழிப்பது? ஸாட்டிலைட் சேனல்கள் காட்டும் உலகம்தான் என் உலகமா? வெளியேறத் துடித்த கால்கள் சுவர்களில் மோதி மோதி முட்டிகள் வீங்கிக் கறுக்க ஆரம்பித்தன. எத்தனை நேரம்தான் செஸ் ஆடிக்கொண்டேயிருப்பது. அதுவும் எதிர்க்காயைக்கூட நானே நகர்த்திக்கொண்டு. பரபரத்து நெளிந்த பாதங்கள் பாளம் பாளமாய் வெடிக்க ஆரம்பித்தன. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் அக்கம் பக்கத்து கிசுகிசுக்களை உட்கார்ந்து பேசி புட்டம் பருத்த பக்கத்து வீட்டு மாமிகளின் சம்பாஷணை அருவருப்பூட்டியது. எதையாவது எழுதி பொழுதைத் தொலைக்கலாமென்றால், பேனாவின் இறுகிய மையில் இறங்குகிறது தனிமை. எம்ப்ராய்டரிங் ஊசி விரல்சதையைக் கிழிக்கும் வலியை, மறைக்கிறது தனிமையின் வலி.
பாட்டி சிரித்தாள். டி.வியில் சர்வதேச ஒளிபரப்புகள் எல்லையற்றுச் சிரித்தன. பளபளக்கும் பத்திரிகைகள் குப்புறக் கவிழ்ந்து படபடத்தன. இன்ஸ்டன்ட் கலாச்சாரம் பொதிந்த சமையலறை. மனித உழைப்பை மறுதலிக்கும் யந்திரங்கள், மலங்கழிக்க பளிங்குக்கல் அறை, பூஜை புனஸ்காரத்துக்கு நுண்ணிய கலை வேலைப்பாடமைந்த கடவுளர் சிலை… வாழ்க்கையின் சகல அம்சங்களும் கற்சுவர்களுக்குள்.
அப்புறம், அலுவலகம் முடிந்து வரும் அன்புக் கணவர், பணிவிடைகள், அவரது உலகம் பற்றிய பிரஸ்தாபிப்பு. நட்சத்திரங்களின் கண் சிமிட்டலை ரசிக்காமலேயே நழுவும் இரவு.
எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை இந்த எலெக்ட்ரானிக்ஸ் வாழ்க்கை. எனது கணவரின் உடைகளை வாஷிங் மெஷினில் போட மறுத்து நானே எனது கைகளால் துவைத்துச் சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அவைகளைத் துவைத்து முடித்து உலர்த்தப் போடுகையில் மனசு நிரம்பியிருந்தது.
நான் மெல்ல எனது கணவரிடம் பேச ஆரம்பித்தேன்.
எனது கணவர் கனிவு மிக்கவர். எனது தனிமை என்கிற விஷயத்தை உணர்ந்து கொள்பவர். தனிமையைக் கொல்லும் சாதனங்களை வீடு முழுக்க நிறுவி வைத்திருப்பவர். ஆமாம், தனிமை என்கிற விஷயத்தை உணராமல் அவரால் எப்படியிருக்க முடியும்? அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது விளக்குகள் பளீரிடும். அவர் வாங்கி வரும் மல்லிகைப் பூவை இரவில்தான் சூடிக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அதுவும் மாதத்தில் சில நாட்கள் மல்லிகைப் பூவுக்குப் பதிலாய் அழுக்கண்டிய கனத்த ஃபைல் கட்டுகள். இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு கொஞ்சம் விச்ராந்தியாய் இருப்போம். நாட்டு நடப்பு, டி.வி.நிகழ்ச்சிகள், தொடர்கதைகள், பெண் சுதந்திரம் பற்றியெல்லாம் விவாதிப்போம். நான் வெகு உற்சாகத்துடன் பங்கெடுத்துக் கொள்வேன். எனது உடம்பெங்கும் புதிய ரத்தம் புரண்டு புரண்டு ஓடிக்களிக்கும். இன்னும் என்னென்னவோ பேச வேண்டுமென்ற வெறி அவர் கண்களில் மின்னும், அலுவலகக் களைப்பு இமைகளை அழுத்தும். எனக்கே எனக்கான நாள் ஞாயிற்றுக்கிழமைதான். நகரத்தின் பிரம்மாண்ட இயக்கம், கால்களில் பதியப் பதிய கடற்கரை மணல், சிறகு பொருத்தும் கலை விழாக்கள் என்று உற்சாகத்தை ஒரேயடியாய் திணிப்பார், அஜீரணமாகும்வரை, அந்த அஜீரணக் கோளாறும் ஒருவித சுகம்தான். அவ்வப்போது மூடு வந்துவிட்டால் செஸ் விளையாடுவோம். ஜெயித்தால் முத்தம் தர வேண்டும் என்பது விதி…
“வேலைக்குப் போறியா… நீயா?” அவர் கிண்டலாகச் சிரித்தார்.
எனக்கு அவர் சிரிப்பு அடியோடு பிடிக்கவில்லை.
“வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லே…” என்றவர் ஓரிரு வினாடிகள் நிறுத்திய பிறகு தொடர்ந்தார். “அப்படியே கெடைச்சாலும் நீ வேலைக்குப் போறது எனக்குப் பிடிக்கலே…” அவர் முகம் சுண்டிப் போயிற்று.
என் பிரியமானவரின் முகம் சுண்டிப் போனது எனக்கு என்னவோ போலிருந்தது.
“காலையிலே எழுந்ததும் ஆஃபீஸ் போற டென்ஷன். அப்புறம் ஆஃபீஸ் டென்ஷன்… இந்த டென்ஷன் லைஃப்பிலிருந்து தப்பிச்சு வீட்டுக்கு வரும்போது ஆறுதலா எனக்குன்னு ஒரு ஜீவன் இருக்க வேண்டாமா?”
அந்த ‘ஜீவன்’ என்ற வார்த்தை என்னவோ போலிருந்தது.
“நீயும் என் மாதிரி டென்ஷனை ஏத்துட்டு ஆஃபீஸ், பிரமோஷன்னு நாம மெஷின் மாதிரி வாழணுமா?”
“தனியா இருக்கறது ரொம்ப போரடிக்குதுங்க…” இதென்ன எனது குரலின் நிறம் மாறிப் போய்விட்டது?
“போரா.. டி.வி. பாக்கறதுக்கே உனக்கு நேரம் போதாது… அந்த அவசரத்துலே வாய்க்கு ருசியா சமைக்க மாட்டேங்கறேன்னு சமையல் புஸ்தகங்கள் வாங்கிக் குடுத்திட்டிருக்கேன்… நீ என்னடான்னா போரடிக்குதுங்கறே.”
எனக்குள் ஓடும் உணர்வுகள் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.
“நான் மனைவியோட சக உணர்வுகளைப் புரிஞ்சுப்பவன். அவளுக்குச் சரிசமமான உரிமை தர்றவன். அவளோட சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் தர்றவன்… அதே மாதிரி என்னோட உணர்ச்சிகளையும் நீ புரிஞ்சுக்கணும்…” அவருடைய குரல் பனித்தது.
தயையாய் வந்த அவருடைய தார்மீகமான வாதம் எனக்குள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. வாஸ்தவமான பேச்சினூடே எனது தராசு முனை சாய ஆரம்பித்தது. குப்பென வியர்த்திருந்த வேர்வை நீர் முத்துக்களாய் அவர் முகமெங்கும் பரிதாபமாய்க் கசிய, எனது முந்தானையில் அதை ஒற்றியெடுக்க மனம் துடித்தது.
வேர்வையைத் துடைத்தவாறே சட்டெனப் பிரகாசமாகி, “ஆமா… இன்னும் ஆறேழு மாசத்தில் நம்ம குட்டி வந்துடப் போறான்… அதுக்குள்ளே நீ வேலைக்குப் போயி…” என்று என் வயிற்றில் அணைந்தார்.
நான் நெளிந்தவாறே விலக, வயிற்றுப் பகுதியில் ஒரு ‘இச்’.
“ஃபெமீனாவில எம்ப்ராய்டரிங் கட்டிங்ஸ் கட் பண்ணி சேகரிச்சு வெச்சிட்டிருந்தியே… நம்ம குட்டிக்கு எம்ப்ராய்டரிங் செஞ்சியா என்ன…?” என்று வயிற்றை நெருடி கிச்சு கிச்சு மூட்ட நான் சரிந்து அவர் மேல் சாய, சற்றைக்கெல்லாம் நாங்கள் சுவாரஸ்யமானோம்.
அந்த சுவாரஸ்யம் வெகுநாள் நீடிக்கவில்லை. நான்கு சுவர்களும் என்னை மெல்ல மெல்ல இறுக்க, மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நாளில்தான் அந்த அமானுஷ்யம் நிகழ்ந்தது.
செஸ் விளையாடிக் கொண்டிருந்தேன், வழக்கம்போல் எதிரணிக்காயையும் நானே நகர்த்திக் கொண்டு.
அப்பொழுதுதான் அந்த அற்புதம்… எதிரணிக்குதிரை சட்டென எம்பி எனது ராணியை வெட்டிவிட்டு ராஜாவுக்கு செக்மேட்டாய் நின்றது.
பிரமிப்புடன் நிமிர்ந்து பார்த்தால்… சதக்கென எனது பார்வைக் குவடுகளைத் துளைத்தது பேனாக் கத்தியின் கூர்மை. கடவுளே, இந்த முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன்…
அதுவரை பார்த்தறியாத அற்புத வடிவம் அது. அவன் முகமெங்கும் ஒளிர்ந்து கமழ்ந்தது தேஜஸ். அவனது விழிகளின் தீட்சண்யத்தில் மின்னித் தெறித்தது பச்சையம். அந்த உருவத்தின் ஆகர்ஷணத்தில் பிரக்ஞை தவற, உன்னதம்.
அவன் எனது நண்பனென்றும், தனிமையில் உழலும் என்னிடம் இணக்கம் கொள்ள வந்திருப்பதாகவும் வாஸ்தமாகப் பேசினான். என்னைப் பல நாட்கள் கவனித்துக் கொண்டே இருப்பதாகவும், இப்பொழுதுதான் என்னுடன் சிநேகம் வைத்துக்கொள்ள காலம் கருதியது என்று சுவரில் சாய்ந்துகொண்டு சாவகாசமாக ஏதேதோ பேசினான். நாதஒலி தடவிய அவனது குரலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தது. அந்த ஆட்டத்தில் அவன் ஜெயித்து விட்டான்.
அழகாக எழுந்து எனது கழுத்தை வளைத்து கூந்தலை விலக்கி, ‘இச்’. பழுக்கக் காய்ச்சிய நெருப்புத் துண்டங்களை ஒற்றியெடுத்தாற்போல அற்புதமான வலி.
எனக்கு அவன் பிடித்துப் போய்விட்டான். நானும் அவனும் சொல்லில் அடைபடா விஷயங்கள் பற்றியெல்லாம் பேசினோம், விவாதித்தோம்.
அந்தக் கட்டத்தில்தான் எனக்கு அவன் அந்த மகத்தான உலகத்தை அறிமுகப்படுத்தினான். அது ஒரு விந்தையூட்டும் விசித்திரமான உலகம்.
எங்கள் நான்காவது மாடியின் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து கொண்டு வெளியைச் சுட்டினான். கீழே தெருவில் நடக்கும் மனிதர்களின் தலைகீழான தோற்றம் பச்சென முகத்தில் அறைந்தது. தலைகீழ் பிரபஞ்சம். அந்தக் கோரக் காட்சியைக் காணச் சகியாது முகத்தை மூடிக்கொண்டேன்.
அங்கு வந்த புதிதில் இந்தத் தோற்றத்தில் ஆட்பட்டு பீதியடைந்து நிற்கும் சமயம் ஆபத்பாந்தவராய் எனது கணவர் தோன்றுவார். அப்படியே ஓடிப்போய் அவரது தோளில் சாய்ந்து கொண்டு கிலேசமுறுவேன். ஒரு ஆசுவாசம். மனிதனின் தலைகீழ் கண்களுக்கும் மனசுக்கும் அவரது நேர்கொண்ட தோற்றம் வாஞ்சையாய் வருடிவிடும்.
ரோமம் மூடிய அல்லது சூர்யக் கொளுந்து பளீரிடும் தலை. தலையிலிருந்து சரேலித்து இறங்கும் விதவிதமான மூக்குகள், அதன் சுவாச மணம், உருண்டையான நீளவடிவ – செவ்வகமான – வடிவம் சிதைந்த முகங்கள், அக்குளில் முளைத்திருக்கும் கரங்கள் – சிறகுகள், புழுதிப்படலம் எழுப்பும் கால்சுவடுகள். இதன் ஒட்டு மொத்தக் கட்டமைப்பே மனிதன். ஆகாசத்தை மிரட்டும் அந்தரவெளியில் நின்றுகொண்டு ஏதேதோ பேசினான். எனக்குள் மெல்ல மெல்ல தோற்றம் உடைந்து நொறுங்கியது.
மனிதர்களின் முகத்தை வைத்து அவர்களின் குணாதியங்களை சொல்லலாம் என்று சாமுத்திரிகா லட்சணம் சொல்கிறது. ஸ்தூலமாகத் தெரியும் முகத்தினடியில் சூட்சுமமாக இன்னொரு முகம் நெளிகிறது. இந்த நேர்கொண்ட பார்வையில், ஸ்தூலம் சூட்சுமம் என்று இரண்டு பிம்பங்கள் இருக்கும்போது, ஏன் தலைகீழ் பார்வையில் ஸ்தூலம் சூட்சுமம் என்று இருக்கக் கூடாது என்று விவாதித்தான். நாள்பட நாள்பட ஸ்தூலமாகத் தெரியும் தலையினுள்ளே சூட்சுமமாக இன்னொரு கபாலம் நெளிபடுவது எனக்குள் புலனாயிற்று.
எல்லாமே வேறு ஒரு பார்வை. வேறு ஒரு தோற்றம். அந்தத் தோற்றத்தில் பற்பல அற்புதங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆன்ம திருஷ்டியில் மல்லாந்திருக்கும் அபூர்வ தரிசனம் அது.
தலைகீழாக நடந்து போகும் சொட்டைத்தலை மனிதனின் முடியில்லாத மண்டை சூர்ய வெளிச்சம் பட்டு பளீர் பளீரென நெருப்பாய் சுட்டது. சற்றே ஒருக்களித்து அவனது தலைப் பகுதியிலிருந்து இறங்கிய மூக்கு உருண்டையாய் அமுங்கியிருக்க முகமெங்கும் அலட்சியம் பொதிந்த புஸுபுஸு ரோமம் கற்றாழை முட்களாய் நீண்டிருந்தன. முகம் வடிவமிழந்து மொழுமொழுவென சதைக்கோளமாய் மாறிப் போயிருக்க, இடுப்புச் சதை புரள கால் எட்டிப் போடும் இரண்டு பெண்மணிகளின் நடையில் நிலம் அதிர்ந்தது. வண்ண வண்ணக் குடைகளால் முகத்தை மறைத்த பெண்களின் நடையில் புழுதிப்படலம். காய்கறிக் கூடை மறைத்தவளின் வற்றிய புட்டத்தின் குலுங்கலில் நலுங்கியது ஒரு நூறு வருஷ நடை. வாகனத்தில் பறந்து போகிறவனின் உடல் காற்றில் பட்டு, நிலம் காற்று ஆகாயம். வீடு திரும்பும் பள்ளிக்கூடச் சிறார்களின் நேர்கொண்ட முகத்தைப் பார்க்க முடியாமல் முதுகில் கூன். தெருமுழுக்க நடந்து வந்தவனின் தூரத்தே வெறித்த பார்வையில் விரக்தி. ஒரு கிழ நரியின் ஆசுவாசத்தோடு அவனது ஆகிருதி…
“அந்த மனிதனிடமிருந்து நிகோடின் வாசனை வீசுகிறதே… உன்னால் உணர முடியவில்லையா…?” என்றான் அவன்.
நான் எனது நாசியைச் சுண்டினேன். குபீரென வீசியது நெடி.
மனிதத்தின் ரூப அரூபங்களில் ஆட்பட்டு மெல்ல மெல்ல அந்த உலகத்தில் புதைந்து போக ஆரம்பித்தோம்.
முன் வழுக்கையை மறைத்து வழியும் கேசம் அண்ணாந்து நிமிர்கையில் பளீரென்ற நெற்றி அனலாய்ச் சொடுக்கியது. அமுங்கிப் போயிருக்கும் மூக்கும் உதடுகளும் புன்னகை கக்க, கண்களில் பாதாளம் இருள, எலும்புகள் இறுகும் தாடை ஏதேதோ தோற்றங்களை உருக்கொள்ள, என்னை நோக்கி உயர்த்தும் கையில் விரல்களாய் சாவிகள்… ஹோவ், அவர் என் கணவரா…
எனது கணவர் வீட்டிலிருக்கும் போது அவன் மாயமாய் மறைந்து போய் விடுவான், அவர் போன சற்றைக்கெல்லாம் குறுஞ்சிரிப்பு சிந்தியபடி தோன்றுவான்.
செஸ் விளையாடுவோம், உதடுகள் குறுகுறுக்க. சமைப்போம், வெங்காயத்தைக் கண்ணீர் வழிய அவன் நறுக்க. துணிகள் துவைப்போம், சோப்பு நுரையை முகத்தில் ஊதி அவன் வெடிக்க. தலைகீழ்த் தோற்றங்களின் ஆன்ம திருஷ்டியால் நெளிபடும் தரிசனங்களை விவாதிப்போம். சம்பாஷணையின் முடிவில் எம்ப்ராய்டரிங் சட்டத்தில் அவன் முகத்தை நெய்திருந்தேன். இவ்வளவு அற்புதமானதா அவன் முகம்?
முகத்தில் ஓடியிருந்த வர்ணப் பூச்சுகளைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, அலுவலகக் களைப்புடனும் கனத்த பெருமூச்சுடனும் எனது கணவர் வந்தார். நான் நீட்டிய சாயங்கால நேரத்துக் காஃபியைச் சுவைத்துக் கொண்டே தனது பையிலிருந்த ஒரு புத்தகத்தைக் கனிவுடன் எடுத்து நீட்டினார். நான் ஆவலுடன் வாங்கிய மறுகணம் சுருங்கிப் போனேன். ‘நவீன வகை எம்ப்ராய்டரிங் செய்வது எப்படி?’
“நீ செய்திருக்கிற ‘வெல்கம்’ எம்ப்ராய்டரிங் ஒண்டர்ஃபுல். அதா உனக்கு ஒரு ஸ்வீட் ஸர்ப்ரைஸ்… உனக்கு ரொம்பப் பிடிச்ச ஹாபி…” என்று பெருமிதமாய்ச் சிரித்தார். மனைவியின் விருப்பத்தைக் குறிப்புணர்ந்து நிறைவேற்றும் அன்பான புருஷன்!
இரவு படுக்கையில் ஏதேதோ பேசினார். தனது அலுவலக நண்பர்கள் தங்களது மனைவிமாரை எப்படி நடத்துகிறார்கள், தான் எவ்வளவு சுதந்திரமாக நடத்துகிறேன் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை சுவைபடச் சொன்னார். நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொண்டு விவாதிக்க வேண்டும் என்று டி.வி., செய்தித்தாள்கள்…
எல்லாம் முடிந்து நாங்களிருவரும் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சட்டென அவரது அமுங்கிப்போன மூக்கு அகன்ற கத்தியாய் கூர்மை பெற்றது. கடவுளே, எனது கணவருக்குப் பதிலாக அவன்.
தேகமாத்யந்தமும் தீ மாரி. அற்புதங்கள் தடவிய அந்தத் தீண்டலின் இன்பம் ரத்த ஓட்டத்தில் பாய்ந்து கபாலமெங்கும் வெப்பம் சூழ்ந்து படர்ந்தது. அவனில்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்கிற நிலைக்கு மெல்ல மெல்லத் தள்ளப்பட்டேன்.
சட்டென சமீப காலங்களில் எனது கணவரின் முகம் சட்டையுரிய ஆரம்பித்திருந்தது.
மாலை நானும் அவனும் பேசிக் கொண்டிருக்கும்போது கதவுக்கு வெளியே காதுகளின் கூர்மை முதுகைத் துளைக்கும். எழுந்துபோய் கதவைத் திறந்தால், ‘ஹி..ஹி.. இப்பத்தான் வந்தேன்…’ அசடு வழியும் விகார முகத்துடன் கணவர்.
திடீரென பகல் நேரங்களில் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டுவிட்டு வந்துவிடுவார். ‘ஒரே தலைவலியா இருக்கு… அதா லீவ் போட்டு வந்துட்டேன்…’ என்பார் நாலாபுறமும் கண்களைச் சுழற்றியபடி.
இரவு தூக்கத்தில் திடுமென விழிப்பு வந்து எழுந்து பார்த்தால், டார்ச்லைட் வெளிச்சத்தில் டேபிள், பீரோ, புக்செல்ஃப் என்று அறையெங்கும் குடைந்து கொண்டிருப்பார்.
திடுமென ஒருநாள் அவன் உருவம் நெய்த எம்ப்ராய்டரிங் சட்டத்தைக் காணவில்லை. சப்த நாடியும் பதறிப் போனவளாய் பீரோ, டேபிள், சமையலறை, பாத்ரூம் என்று இண்டு இடுக்குவிடாமல் தேடிப் பார்த்தேன். வீட்டையே தலைகீழாய் புரட்டிப் பார்த்தேன், ம்ஹும்.
அவனுக்காகக் காத்திருந்தேன். அவன் வந்ததும் முதல் வேலையாக அவனைப் பிரதி செய்ய வேண்டும். வேறு ஒரு எம்ப்ராய்டரிங் சட்டத்தை எடுத்து, வெல்வெட் துணி பொருத்தி, நூல் கண்டுகளைப் பரப்பி, ஊசியில் நூல் கோர்த்து….
ஆயிற்று, விளையாட்டுப்போல் ஒரு வாரமாகிவிட்டது. செஸ் காய்கள் அவனின் தீண்டலுக்காய் சோகமணிந்து காத்திருக்கின்றன. புத்தகங்களின் பக்க மடிப்பில் சொருகிய விவாதங்கள் கிரீச்சிடுகின்றன. அவன் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு வெடித்துச் சிதறும் கோரம். சட்டென டி.விக்கு இரண்டு கொம்புகள் முளைக்க ஆரம்பித்து விட்டன.
உம்மனா மூஞ்சியாய் முகம் மாறிப்போன சமையலறையும், அழுக்கணிந்து மோளியாய்த் தூங்கும் ஆடைகளும், அவன் வரவில்லை. கண் முன்னால் விரிந்து கிடக்கிறது தலைகீழ் உலகம், வெறிச்சிட்டுப்போய்.
வழக்கம் போன்ற அலுவலகம் புறப்படலாக இல்லாமல் அன்று என் கணவர் மிகவும் உற்சாக வயப்பட்டிருந்தார். இந்த ஒரு வாரமாக இப்படித்தான் இருக்கிறாரோ? ஒரு சினிமாப் பாடலை சீழ்க்கையடித்தவாறே தலைவாரிக் கொண்டிருந்த அவரது கண்களில் ஆனந்தக் குரூரம் தாண்டவமாடியது. மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே தனது உருவத்தைக் கண்ணாடியில் ரசித்தவர் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.
“ஏன் குடிமுழுகிப் போன மாதிரி இருக்கே… ம்?”
“நான் ஒரு எம்ப்ராய்டரிங் செஞ்சிருந்தேன்… அதைக் காணோம்…”
“ஹ்ஹாஹாஹாஹாஹா” அவர் சிரித்தார். “அவன் வர மாட்டான்…”
எனக்குச் சடுதியில் புரிந்து போயிற்று. அப்படியானால்… தொண்டைக் குழிக்குள் மாட்டிக் கொண்ட வார்த்தைகளின் நெரிபடலில் முகம் வெளிறிப் போக அவரை ஏறிட்டேன்.
“நோ, இந்த விஷயம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கலே… அருவருப்பா இருக்கு. அதா, அந்த எம்ப்ராய்டரிங் சட்டத்தை எரிச்சிட்டேன்…”
சட்டென எனக்குள் ப்ரக்ஞை தவறியது. நான் நின்றிருந்த நிலம் நழுவ, கிணற்றுக்குள் எனது கணவரின் கீச்சொலி அறைந்து அறைந்து வீழ்ந்தது.
“மறந்துடு… அது ஒரு விஷயமேயில்லை… ம் அப்புறம் இன்னிக்கு நேரமே வர்ரேன். இன்னிக்கு ஒரு ஃபங்ஷன் இருக்கு. டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெடியாயிரு….ஓ.கே…” என்று செல்லமாகக் கன்னத்தைத் தட்டி விட்டுப் போனார்.
சட்டென மயானத்தின் வாசனை வீடெங்கும் பல்கிப் பெருகியது. அவரது அறையின் ஓரத்தில் சாம்பல் குவிந்து கிடந்தது. நான் கைகள் நடுங்க அவனது அஸ்தியைத் தொட்டேன். எனக்குள் பாய்ந்தது மின்சாரம்.
இந்த நிலை எந்நேரம்வரை நீடித்ததோ, நான் எழுந்தபோது உயிர்ப்பற்ற சூப்பிய சதைப் பிண்டமாய் மாறிப் போயிருந்தேன். யோசிக்கவோ, செயல்படவோ முடியாது ஸ்தம்பித்திருந்தது இயக்கம். நான் என் வசத்தில் இல்லை.
என்ன செய்வதென்று தோன்றாமல் நின்றிருந்தேன். சாம்பற் குவியலின் வெண்மை உறுத்தியது. அவிந்த சாம்பலைக் கூட்டி முறத்தில் அள்ளி எடுத்தேன். மெதுவாக நடந்துபோய் மாடியின் கைப்பிடிச்சுவரில் விரக்தியுடன் சாய்ந்து கொண்டு கீழே பார்த்தேன்.
அவன் அறிமுகப்படுத்திய உலகம்!
கீழே தெருவில் மனிதர்களின் தலைகீழ் தரிசனம் விரிந்து கொண்டிருந்தது. அந்தக் காட்சிகளில் என்னைப் பொருத்தி, காலங்களற்று அதில் ஆழ்ந்து போய் நின்றிருந்தேன். ‘இனி அவன் அந்த உலகத்தை அறிமுகப்படுத்த வருவானா?’ சட்டென கையிலிருந்த முறம் அசைந்து கொடுத்தது.
அதைத் தூக்கி அந்த உலகத்துக்குள் அவனைக் கீழே கொட்டினேன்.
சாம்பல், தூவிகளாய் சுழன்று பூமியை நோக்கி விரைய, ஹோவ்… அற்புதமான காட்சி… ஆமாம், அவனேதான், சாம்பல் படலத்தின் மெல்லிய ஸல்லாவில்… கடவுளே, அவன் கீழே தெருவில் நின்று கொண்டிருந்தான்.
என் மயிர்க்கால்களெங்கும் பூக்கள் மலர கையை அசைத்தேன். பலமனைத்தையும் ஒன்று திரட்டி இரண்டு கைகளையும் தட்டினேன். கணீரென்ற மணியின் வெண்கல நாதம் வெளிகளில் ஊடுருவியது.
அவன் சட்டென அண்ணாந்தான். ஹோவ்… அவனது மூக்கு கற்பாறையைப் பிளந்து திமிறி நிற்க, என் கண்களைக் கொத்தியது அற்புதம்.
மஹோன்னத கணங்கள் உடம்பெங்கும் சூழ, எனக்குள் படீரென ஊற்றுக்கண் உடைந்து நெஞ்சில் பாய, பாயுமிடமெல்லாம் தூய்மைப் படுத்திக் கொண்டு உடம்பு எல்லைகளற்று விரிந்தது. என் அக்குளில் சிறகு முளைப்பதை உணர்ந்தேன்.
எழுத்தாளர் பற்றி : கௌதம சித்தார்த்தன் பிரபல எழுத்தாளர். பிரபல இதழ்களில் கட்டுரை, சிறுகதை எழுதி வருகிறார். அவர் ஒரு பதிப்பாளரும்கூட.