பேரிச்சை பழத்தை எவ்வளவு வற்புறுத்தி கொடுத்தாலும் குழந்தைகள் இரண்டுக்கு மேல் சாப்பிடுவதில்லை. உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து தேவை பூர்த்தி செய்யும் முக்கியமான உணாவுப் பொருட்களில் பேரிச்சைக்கு முக்கியமான இடம் உண்டு. இத்தகைய உணவுப் பொருளை தவிர்ப்பது நல்லதல்ல… அதற்காக குழந்தைகளை மிரட்டி தர வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு பிடித்தமாதிரி அதை மாற்றிக் கொடுக்கலாம். உதாரணம் இந்த பேரிச்சை சாக்லேட் பானம் போல…
தேவையானவை:
பேரிச்சை – 4
சாக்லேட் துண்டுகள் – இரண்டு தேக்கரண்டி அளவு
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
பால் – ஒரு கப்
எப்படி செய்வது?
பேரிச்சையை அரை தம்ளர் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். ஊறியதை ஜூஸரில் போட்டு அதனுடன் சாக்லேட் சேர்த்து அரைக்கவும். பிழியும் முன் ஜூஸரில் பால் ஊற்றி ஒரு சுற்று சுற்றி பிழியவும். பிழிந்ததை ஒரு கப்பில் ஊற்றி ஐஸ்கட்டிகள் சேர்த்து அருந்தவும்.
குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இந்த பானம் பிடிக்கும். சாக்லேட் துண்டுகளுக்குப் பதில், சாக்லேட் ஃபிலேவரில் வரும் சத்து பான கலவையையும் சேர்க்கலாம்.