90களில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பலத்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இருந்தது. திராவிட கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி மக்களிடம் பின்னடைவை சந்தித்த அந்த நேரத்தில் ரஜினி தலைமையில் மாற்று அணி அமைந்து ஆட்சியை பிடிக்க மூப்பனார் உள்ளிட்ட சில தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசத்தை தவிர்த்தார். அன்று முதல் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற சீசனல்(ரஜினி படம் ரீலிசாகும்போது மட்டும்) பூதம் தமிழ் ஊடகங்களில் உலவதுண்டு.
இந்த முறையும் அப்படித்தான் ‘லிங்கா’ பட வெளியீட்டை ஒட்டி ரஜினி அரசியல் பிரவேச பப்ளிசிட்டி பேச்சுக்கள் ஒலிக்கின்றன. இந்த முறை சற்றே காரண, காரியங்களைப் பொறுத்தி ரஜினியின் அரசியல் எண்ட்ரியை கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். அதாவது தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த ரஜினி போன்ற (விவிஐபி + இந்துத்துவ நிலைப்பாடு உடையவர்) ஒரு முகம் தேவைப்படுவதாகவும் அவரை முதல்வர் வேட்பாளராக சட்டமன்ற தேர்தலில் நிறுத்தப் போவதாகவும் செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது. மோடிக்கும் ரஜினிக்கும் நல்ல உறவு இருப்பதாக கூடுதல் காரணமும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ‘ரஜினியை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோன்ற எந்த முயற்சியிலும் பாஜக ஈடுபடவில்லை.ரஜினி மீது பாஜக நல்ல மதிப்பு வைத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அவரை நேரில் சென்று சந்தித்தார்.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவரது கனவுத் திட்டங்களில் ஒன்றான நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி தருவதாக ரஜினி அறிவித்தார். அவர் தேசிய எண்ணம் கொண்டவர். அவரை நாங்கள் அழைப்போம். பாஜகவில் அவர் இணைந்தால் வரவேற்போம்’ என்கிறார்.
எது எப்படியோ இதில் முழு ஆதாயம் அடையப் போவது லிங்கா படக்குழு மட்டுமே என்பதை சமானிய மக்கள் அறிந்தால் சரி…