செட்டிநாடு தொழில் குழுமத்தின் தலைவராக இருக்கும் எம். ஏ. எம். ராமசாமி, நிறுவனங்களின் பதிவுத்துறை அலுவலர் மனுநீதி சோழனுக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக மனுநீதி சோழனும் கைதாகியுள்ளார்.
செட்டிநாடு தொழில் குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து ராமசாமியை நீக்குவதற்காக நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடைபெற இருந்ததாகவும் அதை நிறுவனங்களின் சட்டப்படி செல்லாது என அறிவிக்க பதிவாளருக்கு ரூ. 10 லட்சத்தை லஞ்சமாக ராமசாமி கொடுத்ததாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக தன் வீட்டில் தன் அனுமதி இல்லாமல் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படுவதாகவும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதை விசாரித்த காவல்துறை செட்டிநாடு குழுமத்தில் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் லலித் குமார் என்பவரை விசாரித்தது. தான் வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா தான் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தச் சொன்னதாக காவல்துறையிடம் தெரிவித்தார் லிலித் குமார். குடும்பப் பிரச்னை என்பதால் அந்த வழக்கை அப்படியே விட்டதாக காவல்துறை அதிகாரிகளே கூறியுள்ளனர்.
செட்டிநாடு குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, எம். ஏ. எம். ராமசாமியின் வளர்ப்பு மகன் ஆவார். மனைவி இறந்துவிட்ட நிலையில் 82 வயதான ராமசாமி தனியாக வசித்து வந்தார். தந்தைக்கும் வளர்ப்பு மகனுக்குமான அதிகார சண்டையில் தந்தை சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எம். ஏ. எம். ராமசாமி, சென்னை ரேஸ் கிளப்பின் தலைவராக இருந்தவர். குதிரைகளின் மேல் ஆர்வம் கொண்ட ராமசாமி, 400 குதிரைகளுக்கு மேல் இப்போதும் பராமரித்து வருகிறார்.