
சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோரை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வது பயனற்றது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இதுதொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ள தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேரையும் கடந்த ஆண்டு புதுச்சேரி நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியா உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மேல்முறையீடு தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திடம் புதுச்சேரி மாநில அரசு கருத்து கேட்டிருந்தது.
விசாரணையின் தன்மை, குற்றப்பத்திரிகை தாக்கல் உட்பட வழக்கிலுள்ள குறைபாடுகள் என 20 முக்கிய அம்சங்களை தீர்ப்பின்போது நீதிபதி சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிவித்துள்ள தலைமை வழக்கறிஞர், சங்கர ராமனின் குடும்பத்தினர் உட்பட 83 பேர், பிறழ்சாட்சிகளாக மாறியிருப்பதாகவும் கூறியுள்ளார். இதையும் மீறி மேல்முறையீடு செய்தால், உயர்நீதிமன்றத்தின் கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என உள்துறை அமைச்சகத்திடம் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அறிவுறுத்தியுள்ளார்.