உலக புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்ற அரசியல் விமர்சகருமான யூ.ஆர்.அனந்தமூர்த்தி (81) வெள்ளிக்கிழமை மாலை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி அருகேயுள்ள மெலிகே கிராமத்தில் 1932 டிசம்பர் 1-ம் தேதி பிறந்த உடுப்பி ராஜகோபாலச்சார்ய அனந்த் மூர்த்தி, இந்துமத வர்ணாஸ்ரம ஏற்றத் தாழ்வுகளை கடுமையாக சாடியவர். ஆங்கில பேராசிரியரான இவர் தொடக்கத்தில் கன்னடத்தில் சிறுகதை, நாவல்களை எழுத ஆரம்பித்தார். சம்ஸ்காரா, பாவா, பாரதிபுரா போன்ற நாவல்கள் பிரபலமானவை. இவரின் படைப்புகள், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1990-களுக்குப் பிறகு ஆங்கிலத்தில் சமூக, அரசியல் விமர்சனங்களை எழுதியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார்.
கன்னடத்தில் மட்டுமில்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, இலக்கிய உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஞானபீட விருதை 1994-ம் ஆண்டு பெற்றார். இந்திய இலக்கிய உலகிற்கு ஆற்றிய பெரும் சேவைக்காக யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு 1998-ம் ஆண்டு ‘பத்மபூஷண்’ விருது வழங்கப்பட்டது.
கடந்த மக்களவை தேர்தலின் போது, ‘மோடி பிரதமரானால் நாட்டை விட்டே வெளியேறுவேன்’ என மோடியை விமர்சித்ததால் சில நெருக்கடிகளை சந்தித்தார். கடந்த 50 ஆண்டுகளாக ஆர். எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற மதவாத அமைப்புகள், கட்சிகளை எதிர்த்த படைப்பாளி இவர்.
சமீப காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட யூ.ஆர்.அனந்தமூர்த்தி கடந்த 11-ம் தேதி பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனந்தமூர்த்தி மாற்றப்பட்டு 10 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரை கண்காணித்துவந்தனர். வெள்ளிக்கிழமை மாலை அவருடைய உயிர் பிரிந்தது. எழுத்தாளர் அனந்தமூர்த்தியின் மறைவையொட்டி கர்நாடக அரசு 3 நாட்கள் துக்கம் கடைபிடிப்பதாக அறிவித்திருக்கிறது.